கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம்,சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தில் நடிகர் விக்ரமுடனான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"விக்ரம் சாரிடம் சென்று மகான் ஸ்கிரிப்ட் கொடுத்தேன். அவரும் அதைப் படித்துப் பார்த்தார். பிதாமகன் மாதிரியான படங்கள் பண்ண விக்ரம் சாருக்கு தீனி போடுவது மாதிரி இந்தக் கதையில் ஏதாவது இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. சாரிடம் கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்த பிறகு, இந்தக் கதை உங்களுக்கு எந்த வகையிலாவது சேலஞ்சிங்காக இருக்கிறதா என்று கேட்டேன். அவருக்கு இந்தப் படம் மிகவும் திருப்தியாக இருந்ததாகக் கூறினார். இந்த சீன் இப்படித்தான் வரும் என்று நினைத்து நாம் எழுதியிருப்போம். ஆனால், நடிகர்கள் நடித்து முடித்த பிறகு அந்த சீன் அடுத்த லெவலுக்கு போயிருக்கும். அப்படி இந்தப் படத்திலும் நிறைய சீன்கள் உள்ளன.
விக்ரம் சாரின் சட்டையில் மண் ஓட்டுவது மாதிரி ஒரு சீன் இருக்கும். நான் பார்த்தவரைக்கும் ஒன்று சட்டையை மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வருவார்கள் அல்லது மண் எடுத்துக்கொண்டு வந்து சட்டையில் பூசுவார்கள். சட்டையில் மண் ஓட்ட வேண்டும் என்று விக்ரம் சாரிடம் சொன்னதும் சட்டையை போட்டுக்கொண்டு தரையில் உருள ஆரம்பித்துவிட்டார். சார் மண் எடுத்துவந்து சட்டையில் போட்டுக்கலாம் என்று நான் கூறியதற்கு, அது பார்க்க செயற்கையாக இருக்கும் என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு படத்தில் நடித்தார். இது செட்டில் இருந்த அனைவருக்குமே ஒரு பாடமாக இருந்தது" என்றார்.