![hsr](http://image.nakkheeran.in/cdn/farfuture/6V-eR66hMHHk7a29rC0qSvfOomK-5DtapgRvP3Qz0Qc/1589607859/sites/default/files/inline-images/jo-ponmagal-vanthal_1.jpg)
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.ஜே ஃபெரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாவது குறித்து படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் கூறும்போது....
"பொன்மகள் வந்தாள் பட வெளியீட்டிற்காக 'அமேசான் ப்ரைம்' வீடியோவுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார். மேலும் இதுகுறித்து இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் கூறும்போது... "ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து படம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பற்றி அறிய மக்கள் எங்களிடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார்கள். படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படுவதால், பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எங்கும், எப்போது வேண்டுமானாலும் படத்தையும் படத்தில் அற்புதமாக அமைந்துள்ள நீதிமன்ற காட்சிகளையும் பார்த்து மகிழலாம்" என்றார்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் பொன்மகள் வந்தாள் படம் உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அமிதாப் பச்சன் (Black, Piku) மற்றும் ஆயுஷ்மான் குரானா (Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun) நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar) "குலாபோ சிதாபோ" (Gulabo Sitabo) வித்யாபாலன் (Dirty Picture, Kahaani) நடித்துள்ள "சகுந்தலா தேவி" (Shakuntala Devi), ஜோதிகா நடித்துள்ள "பொன்மகள் வந்தாள்" மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "பென்குயின்" (தமிழ் மற்றும் தெலுங்கு) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியிடப்பட இருக்கிறது.