Skip to main content

"கத்தாத... மைக்கை கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன்" - மேடையில் கோபப்பட்ட இளையராஜா

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

ilaiyaraja gets angry at viduthalai 1 audio launch

 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (08.03.2023) நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

 

ad

 

இளையராஜா பேசுகையில், "இந்த படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கின்ற படமாக இருக்கும். வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையே. ஒரு கடலில் எப்படி அலை வருகிறது. ஆனால், ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதை போல் வெற்றிமாறன் வெவ்வேறு திரைக்கதைகளை அமைக்கிறார். அது எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. திரையுலகத்திற்கு இவர் முக்கியமான இயக்குநர். நான் 1500 படங்கள் பணியாற்றிய பிறகு இதைச் சொல்கிறேன் என்றால், அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிமாறன் திரையுலகிற்கு கிடைத்த ஒரு நல்ல இயக்குநர். இந்த படத்தில் இதுவரை நீங்க கேட்காத இசையை கேட்பீர்கள்" எனப் பேசிக்கொண்டிருந்தார். 

 

அப்போது மேடைக்கு கீழே இருந்த ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனால் கோபமடைந்த இளையராஜா, "இந்த மாதிரி சத்தம் போட்டீங்கன்னா நான் என்ன பேசுறது. கத்தாத.. மைக்கை கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன்" என்றார். பின்பு அங்கிருந்தவர்கள் அமைதியாகிவிட்டனர். தொடர்ந்து பேசிய இளையராஜா, படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடலைப் பாடி விடைபெற்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.