தமிழ், மலையாள, தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான், தமிழில் கடைசியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898 ஏ.டி. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு இந்த ஒரு படம் மட்டும்தான் அவருக்கு வெளியானது.
அதே போல் இந்தாண்டும் அவர் நடிப்பில் ஒரு படம் மட்டும்தான் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடித்திருக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் சமிபத்திய பேட்டி ஒன்றில் கிங் ஆஃப் கோதா படத்திற்கு பிறகு தொடர்ந்து அதிக படங்களில் நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “எனக்கு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. இது யாருடைய தவறும் இல்லை. என்னுடைய சில படங்கள் தோல்வியடைந்தது. நான் உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன். கடந்த வருடம் ஒரே ஒரு படம்தான் நடிக்க முடிந்தது. ஒருவேளை அது தான் நான் செய்த தவறு. என்னுடைய உடல்நிலையில் போதிய நான் கவனம் செலுத்தவில்லை” என்றார்.