போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. இதையடுத்து விமலை வைத்து சார் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே சூர்யாவின் கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், “ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும். பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.
இதனிடையே நடிகர் விஜய்யின் த.வெ.க. மாநாடு நேற்று(27.10.2024) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 45 நிமிடங்களுக்கு மேலாக பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பா.ஜ.க-வையும் தி.மு.க.-வையும் சாடியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஜய்க்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இயக்குநர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட், “யப்பா... உன் கூடவுமா அரசியல் பன்னனும்... பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.