Skip to main content

பாரதிராஜாவுடன் இணைந்து நடிக்கும் அருள்நிதி

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

arulnithi next movie title Thiruvin Kural

 

தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி கடைசியாக 'டைரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  

 

இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க படத்திற்கு 'திருவின் குரல்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அருள்நிதியுடன் இணைந்து பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

'லைகா புரொடக்‌ஷன்ஸ்', தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' கமலின் 'இந்தியன் 2' மற்றும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் 62வது படம் உள்ளிட்ட படங்களைத் தயாரிக்கிறது. மேலும் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

விஷாலுக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை செய்தது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில கடிதங்களை கேட்டு தங்களது ஆடிட்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதம் தற்போது தான் கிடைத்திருப்பதால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.