
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி. ரஜினியுடன் மனிதன், ராஜா சின்ன ரோஜா, கமலுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர்த்து இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். பின்பு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
இவர் ஏழுமலையானின் தீவிர பக்தர் என்பதால் திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை தெரிந்த தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர், அவரிடம் சிறப்பு தரிசனம் செய்து தருவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும் பிரபலங்களுடன் அவர் தரிசனம் செய்து கொடுத்தது போல் புகைப்படங்களையும் காண்பித்துள்ளார். இதனை நம்பிய ரூபிணி முதலில் 77,000 ரூபாய் சரவணனுக்குக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறப்பு தரிசனம் தொடர்பாக பல்வேறு காரணங்களுக்காக மேலும் பணத்தை கொடுத்து ஒட்டுமொத்தமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பின்பு சரவணனை ரூபிணி தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ரூபிணி இது தொடர்பாக ஆந்திர அரசை தொடர்பு கொண்டு சரவணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.