Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #06

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

iraval edhiri part 6

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

அது ஒரு ஹைடெக் மருத்துவமனை ஏராளமான லட்சங்களை விழுங்கியிருக்கிறேன் என்று பத்திரம் எழுதித்தாரத குறையாய் அங்கு மொசைக் மேனியில் தரை பளபளத்தது. முழுவதும் ஏசி செய்யப்பட்ட வினைல் நாற்காலிகள் சீனியர் நோயாளிகளைத் தாங்கியிருந்தது. 

 

இன்னும் இரண்டு ஸ்கேன் எடுக்கச்சொல்லி இருக்காங்க 

“எங்கே போகணும் ?” நைந்து போன குரலில் கேட்ட அப்பாவிற்கு....?!

“இரண்டாவது மாடிக்கு போகணும்பா ?! வார்ட்பாய் வருவாராம் வீல்சேர் எடுத்துக்கிட்டு ?”

“ஏன் நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். எதுக்கு வீல்சேர் நான் நடந்தே வரேன் என்று அடம்பிடித்த அப்பாவிடம் ....

“சார் இது ஆஸ்பிட்டல் ரூல்ஸ்ங்க, எங்களைத் திட்டுவாங்க ?!” என்றார் வார்ட்பாய்.

“ம்...!” “என்ன ஆஸ்பத்திரியோ...? நோயில வருபவர்களுக்கு உங்களுக்கு ஒண்ணும் இல்லை பயப்படாதீங்கன்னுதான் டாக்டர் முதல்ல சிரிச்ச முகத்தோட சொல்லுவார் எங்க காலத்திலே எல்லாம். இங்கே ஒருத்தர் முகத்திலும் சிரிப்பு இல்லை. சாதாரண தலைவலின்னாலே எல்லா டெஸ்டும் எடுத்துட்டு ஏதோ நோயாளி மாதிரி இப்படி வீல்சேரிலும் ஸ்டெச்சரிலும் தூக்கிட்டுப் போனா நோயாளிகிட்டே இருக்கிற கொஞ்சநஞ்ச தன்னம்பிக்கையும் கெட்டுப்போகாதா ? இதிலே பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே போடறமாதிரி பச்சைக் கலர்லே ஒரு டிரஸூ வேற லூசா ?!”

“அப்பா கொஞ்ச நேரம் பேசாம வாங்க ?”  பணம் அதிகம் செலவழித்த கடுப்பில் அடித்தொண்டையில் கத்தினான் மகன். 

“ம்...!” “வர...வர எங்க காலத்திலே ஆனந்தவிகடன்ல டாக்டர் ஜோக் மாதிரி ஆகிப்போச்சு ஆஸ்பத்திரிகளின் நிலைமை என்று ஆற்றாமமைத் தாங்காமல் பேசியபடியே சென்றார் அந்த பெரியவர்.

 

அவர்களைக் கடந்தபடியே சீனியர் டாக்டர் கீர்த்தனா, மாறனிடம் பேசியபடி வந்தாள். 

“அந்த பையன் இப்போ எதையும் கிரகிக்கிற மனநிலையில் இல்லை ஸார் ? ஏதோ ஆழமான பாதிப்பு அவன் மனசில இறங்கியிருக்கு. அவன் கைப்பகுதியிலே புஜத்தில் எல்லாம் ஊசிகள் போட்ட மார்க் இருக்கு. அவனுக்கு தொடர்ந்து டிரக்ஸ் கொடுத்து இருக்காங்க அந்த பையனின் கைவிரல்கள் நீலநிறமா இருக்கு. தவிரவும் ஆஸ்பிட்டல்லேயே இரண்டுதடவை பிக்ஸ் வந்திருக்கு. அவன் அன்கான்ஷியஸ் ஆகியிருக்கிறான்!”.

“உங்களுக்குத் தெரியாதது இல்லை டாக்டர். காணாமல் போன நாலுபேரில் இரண்டு பேர் பிணமாத்தான் கிடைச்சாங்க இந்த பையன்தான் உயிரோட கிடைச்சிருக்கான். ஆனா இவன்கிட்டேயிருந்து ஒரு தகவலும் வாங்க முடியலையே ?!”

“உண்மைதான் ஸார். இவன் வயசுக்கு கண்டினியூ டிரக்ஸ் நிறைய பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும். அவனோட ஹார்கன்ஸ் கூட பாதிக்கப்பட்டு இருக்கலாம். இப்போதைக்கு அவனுக்கு கான்சியஸ் வரும் வரையில் பொறுத்திருங்க மேற்கொண்டு நான் தகவல் தெரிவிக்கிறேன்.!” கீர்த்தனா மாறனிடம் விடைபெற்றுக் கொண்டு அந்தப் பையனின் பெற்றோர்களிடம் சென்றாள். மாறன் ஜீப்பிற்கு வந்தான். வேந்தன் கைகளில் புத்தகத்தோடு நின்று கொண்டு இருந்தான்.

“வண்டியை எடுங்க வேந்தன் கமிஷனர் ஆபீஸ் போகணும். !”

“சரிங்க ஸார்.....வேந்தன் வண்டியைக் கிளப்ப அவர் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு இது பிரெய்லி புக்ஸ்தானே ?! யாருக்காக வாங்கிட்டுப் போறீங்க ?”

“ஆமா ஸார். என் அண்ணன் பையனுக்கு பிறந்ததில் இருந்தே கண் தெரியாது ஸார். அவனோட படிப்புக்குதான் இந்த புக்ஸ். ரொம்ப நல்ல சூட்டிக்கையான பையன் ஸார்!” 

“ஓ....!”

“என்ன ஸார் அமைதியாயிட்டீங்க?!”

“எனக்கு டைவர்ஸ் ஆகாம இருந்திருந்தா ?!  இந்த பசங்க வயசிலே எனக்கும் ஒரு பொண்ணோ பையனோ இருந்திருப்பான் வேந்தன். பாவமா இருக்கு. என்ன தப்பு பண்ணாங்க இவங்க. கடத்திட்டுப் போய் கொன்னு போதை மருந்து ஏத்தி அவனோட மனநிலையை முழுவதும் சிதைச்சி அவன் மட்டும் என் கையிலே கிடைக்கட்டும் !”  மாறனின் கோபம் வேந்தனை சற்றே வாயடைக்க வைத்தது. 

 

கமிஷனர் போனில் அழைத்தார். விவரங்களைச் சுருக்கமாக சொன்னான் மாறன். “ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்துடுச்சு நீங்க வந்திட்டா பேசிடலாம் !” என்றார். 

“சரி ஸார் !” என்று ஃபோனை வைத்தவன். “இந்த நாலு கேஸிலும் உங்க விசாரணை எனக்கு ரொம்பவும் உதவியா இருந்தது வேந்தன். கேஸ் பற்றி உங்கள் அபிப்ராயம் ?”

“நான்கு பிள்ளைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு சார்.”

“என்ன ?”

 

வேந்தன் பேசத் தொடங்கினான். “இவங்க நாலு பேரோட பேரண்ட்ஸ்ஸூம் வேலைக்குப் போறவங்க பெரும்பாலும் இவங்க வீட்டில் தனிமையாகவோ அல்லது பெரியவங்க இருந்தாலும் கவனிப்பில்லாமத்தான் இருக்காங்க. பொருளாதார ரீதியில் கவுர்ங்கிற பையனோட பெத்தவங்களைத் தவிர மற்ற யாரும் பெரிய லெவல்ல இல்லை. எல்லாரும் வேனில்தான் பள்ளிக்கு போய்ட்டு வர்றாங்க. ஸ்கூல்விட்டு அவங்க யாரும் எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸில் ஈடுபடுவதில்லை.”!

“ஓ.....!”

“இன்னொரு ஒற்றுமை ஆன்லைன் கிளாஸ்ங்கிறதால எல்லார் கையிலும் காஸ்ட்லி போன், ஹைஸ்பீடு இன்டர்நெட் கனெக்ஷன் எல்லாம் இருக்கு இது போதாதா ?! நாமளே சர்ச் ஆப்ஷன் போய் எதையாவது தேடும்போது சம்பந்தமில்லாம கண்ட சைட்டும் வரும். நல்லது கெட்டதுன்னு பிரிச்சிப் பார்க்கிற மனநிலையை யாரு ஸார் சொல்லித் தர்றாங்க பிள்ளைங்களுக்கு, அப்பா அம்மாவுக்கு நேரம் இல்லை, அதுவும் கொரானாவிற்குப் பிறகு பொருளாதாரம் தவிர்த்து வேற எந்த நினைப்பும் இல்லை. தாத்தா பாட்டி அரவணைப்பு இருந்தாலும், அவங்களுக்கு என்ன தெரியுன்னு ஒதுக்கி வைக்கப்படறாங்க. சில நேரங்களில் அவங்களே ஒதுங்கிடறாங்க ?! பிள்ளைகளை இப்போ வளர்க்கிறது மீடியாவும் இணையமும்தான்!” 

“OTT -தளங்களில் வெளிவரும் சீரீஸ் வாழ்க்கை முறையையே மாற்றிப் போடுகிறது. அதில் வர்ற கதாபாத்திரங்களாகவே தன்மை இமிடேட் பண்ண தொடங்கிட்டாங்க. இப்போதை கல்ச்சர் உனக்கும் எனக்கும் சரின்னா எதுவும் தப்பில்லைங்கிறதுதான். 16+, 18+ ன்னு ஒரு ஓரத்தில் போட்டுட்டா என் மேல தப்பில்லைங்கிறது அவனின் வாதம் ஒரு சர்வேயிலே அதிகமா ஆபாச பட சைட்டுகள்தான் தரவிறக்கப்படுதுன்னும், பார்க்கப்படுதுன்னும் ப்ரூவ் ஆகியிருக்கு. நம்ம அலட்சியங்கள்தான் பிரச்சனைக்கு காரணம் அதல ஒண்ணுதான் இந்த கடத்தலும், கொலையும்!” . வேந்தனின் நீண்ட பேச்சைக் கேட்ட மாறனுக்கு சமூகத்தின் மீதான வேந்தனின் அக்கறை புரிந்தது. 

“ம்...வேந்தன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே ?”

“சொல்லுங்க ஸார்!”.

“மொபைலை டிராக் பண்ண முடியலைன்னாலும், இந்த பசங்க இன்டர்நெட்டில் பார்த்தது டவுன்லோடு செய்ததற்கான ஹிஸ்டரி எனக்கு வேண்டும். அவங்க வீட்டுலே என்ன நெட் கனெக்ஷன் இருக்குன்னு செக் பண்ணுங்க. சில பேரண்ட்ஸ் பேரன்ட் கன்ரோலிங் போட்டு இருப்பாங்க அதை வைச்சி கூட அவங்க என்னென்ன அந்த மொபைலில் பார்த்தாங்கன்னு கண்டுபிடிக்கலாம்!”. 

“நல்ல ஐடியா ஸார்.”

“உடனே செயல்படுத்தணும். நான் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு வந்திடறேன் நீங்க இதை கவனிங்க.”

“சரிங்க ஸார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட். போற வழியிலே இந்த புக்கை வீட்ல கொடுத்திட்டு போயிடறேன் ஸார். பையன் ஆசையா காத்திருப்பான்?!”.

“ஒ.கே என்று அவர்கள் பேசி முடிக்கவும் கமிஷனர் அலுவலகம் வரவும் சரியாக இருந்தது!”. மாறன் வண்டியிலிருந்து உதிர்ந்து நடந்தான். 

“வாங்க மிஸ்டர் மாறன்....!”வரவேற்ற கமிஷனிரின் அறையில் பாரன்சிக் ஆபிஸரும், டாக்டரும் அமர்ந்திருந்தார்கள். 

 

பாரன்சிக் ஆபிஸர் பேச ஆரம்பித்தர். “சார் நீங்க உங்க வீட்லே கொடுத்த புட் பிரிண்ட்ஸ் எல்லாமே இதில இருக்கு ஆனா நிறைய குழப்பங்களோட ?! உங்க வீட்டுலே இருந்து எடுத்த புட் பிரிண்ட்ஸ்-ல இரண்டு விதமான ஷூ தடங்கள் பதிவாகியிருக்கு?!”. 

“அதிலென்ன குழப்பம் ?”

“டிராலியின் நான்கு சக்கரங்கள் பேக்டரியில் வெயிட்மிஷினரிஸை மூவ் பண்ண கொண்டு போற டிராலியோட சக்கரத்தின் தடங்கள் பதிவாகியிருக்கு கிட்டத்தட்ட 100 கிலோவுக்கும் மேல அதில் ஏற்றித்தள்ளலாம். முன்பக்க அழுத்தம் அதிகமாக இருக்கிறதால சக்கரத்தின் பதிவுகளில் சில வளைவுகள் தெரியுது டிராலியைத் தள்ளிகிட்டு வந்து இரண்டு பேர்தான். இடது பக்கத்தில் இருக்கிறவனோட காலடித்தடங்களில் வித்தியாசம் இல்லை. ஷூ சைசை வைத்துப் பார்க்கும் போது அவனுடைய சைஸ் 8 அல்லது 9 இருக்கலாம். முன்பக்கம் குறுகியிருக்கு அதே நேரம் பின்பக்கத்தில் சின்ன ஹீல்ஸ் பொருத்தப்பட்டதற்கான அடையாளம் தெரிகிறது!”

“ஆனா வலது பக்கத்தில், பதிவாகியிருக்கிற தடத்தில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று சின்னதாகவும் இருக்கு. அதாவது இரண்டு காலில் ஒரு கால் ஊனமாக இருக்க வாய்ப்பிருக்கு ஏன்னா அதில் குதிரையின் குளம்படிமாதிரி ஒற்றைத்தடம் இருக்கு. வந்திருந்தவன் தன்னோட வலது காலை இழந்திருக்கிறான் கிட்டத்தட்ட அவனுக்கு பாதமே கிடையாது?!”. 

 

மாறன் அமைதியாய் கேட்டுக் கொண்டான். “பெட்டியைச் சோதிச்சீங்களா ?”

“ம்...!” “ நீங்க சந்தேகப்பட்டா மாதிரி அந்த தெர்மாகோலில் பொருத்தப்பட்டு இருந்தது ஆக்ஸிஜன்தான். அதைவிடவும் இதைப் பாருங்கள் இறந்து போன இரண்டு பசங்களோட விரல் நகங்கள். அதில் ஒரே நேர்க்கோட்டில் புள்ளிகள் இருக்கு.” அவர் புகைப்படத்தைக் காட்டினார். 

“இது ... !” “என்னன்னு தெரியலை, அடையாளன்னு சொல்லணுமின்னா இது கொலையாளி நமக்கு விட்டுப்போன க்ளூவாக்கூட இருக்கலாம். நகத்தை அளவா வெட்டி எடுத்து அதில் சிறுசிறு துளைகள் இட்டு மீண்டும் அதை ஒட்டியிருக்காங்க அந்த விரல்களின் இறுக்கத்தையும் ரத்தம் நகப்பகுதிகளில் உறைந்திருக்கிறதையும் பார்த்தா அவங்க உயிரோட இருக்கும்போதே அதை எடுத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன் எனக்கு தெரிந்து இது ஏதோ க்ளூவா இருக்க வாய்ப்பிருக்கு!”. 

 

மாறன் அந்தப் புகைப்படத்தை உற்று பார்த்தான். “டாக்டர் சொன்ன செய்தியில் அந்த பசங்க அனுபவித்திருந்த வலியை உணர முடிந்தது?!”கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தான். மூளைக்குள் புதிதாக ஒரு வெளிச்சம். வேந்தனை அழைத்தான் ஃபோனில். 

 

தொடரும்...

 

-லதா சரவணன்