Skip to main content

சென்னை அணி த்ரில் வெற்றி; கெய்க்வாட் அசத்தல்; தோனி புதிய சாதனை

Published on 03/04/2023 | Edited on 04/04/2023

 

Thrill win for Chennai team; Gaekwat is wacky; Dhoni new record

 

16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

 

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கான்வே 47 ரன்களுக்கும் அடுத்து வந்த துபே 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 

தொடர்ந்து வந்த மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி ஓவரில் ராயுடு அதிரடி காட்டி வேகமாக ரன்களை சேர்த்தார். இறுதி ஓவரின் இரண்டாம் பந்தில் களமிறங்கிய தோனி தான் சந்தித்த முதல் இரு பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்த வீரரானார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 217 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது.

 

இமாலய இலக்குடன் ஆடிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மேயர் மற்றும் ராகுல் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதிரடியாக விளையாடிய மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். பின்பு வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் பூரன் 18 பந்துகளுக்கு 32 ரன்களை எடுத்து வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. சென்னை அணியில் மொயின் அலி 4 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.