Skip to main content

மும்பை வெற்றிக் கணக்கைத் தொடங்குமா? - ஐ.பி.எல். போட்டி #7

Published on 12/04/2018 | Edited on 12/04/2018

சன்ரைஸெர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் மோது ஐபிஎல் டி20 இன்று நடைபெறுகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

 

 

ஏற்கெனவே, இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது சன்ரைஸெர்ஸ் ஐதராபாத் அணி. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சனைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

 

ஐபிஎல் தொடக்க தினத்தன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம், தனது சொந்த மண்ணிலேயே தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்கத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், பிராவோவின் அதிரடி ஆட்டம் போட்டியை தலைகீழாக மாற்றியது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என விளாசி சென்னையை வெற்றிபெறச் செய்தார் கேதர் ஜாதவ்.

 

ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலுமே தரமான பேட்டிங் லைன்-அப் இருப்பது பலமாக இருந்தாலும், பவுலிங்கைப் பொருத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். ஆனால், அதன் அசுர பலத்தை சென்னை அணி பந்தாடியதை மறந்துவிடக்கூடாது. இரண்டு அணிகளிலும் ரஷீத் கான் (SRH), மாயன்க் மார்கண்டே (MI) போன்ற மிகமுக்கியமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஐதராபாத் அணிக்கு இது சொந்த மைதானம் என்பதால், ரசிகர்களின் ஆதரவு முழுக்க முழுக்க அந்த அணிக்கே இருக்கும். ஏற்கெனவே, சொந்த மண்ணில் தோற்றுப்போன மும்பை அணி, அந்நிய மண்ணில் தனது வெற்றியைப் பதிவுசெய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.