Skip to main content

தமிழக வீரரை அணியில் சேர்ப்பாரா அஸ்வின்... கேகேஆர் vs பஞ்சாப் ஒரு அலசல்...  

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

ஐபிஎல் 2019 தொடரின் ஆறாவது போட்டி கொல்கத்தா க்னைட் ரைடர்ஸுக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே தலா ஒரு போட்டியில் விளையாடி வெற்றிப் பெற்றுள்ளது. கேகேஆர் அணி கடந்த மேட்சில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத்துடன் மோதியது. முதலில் ஆடிய ஹைதரபாத் அணி 181/3 (20 ஓவர்கள்) அடித்திருந்தது. இதனையடுத்து சேஸ் செய்ய களமிறங்கிய கேகேஆர் அணி நிதானமாக ஆடியது. கடைசி மூன்று ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று இருந்தபோதும் மேற்கிந்திய வீரர் அண்டிரிவ் ரஸ்ஸல் அசால்ட்டாக சிக்ஸர்களை பறக்கவிட்டு கேகேஆர் வசம் மேட்சை கொண்டு வந்தார். கிட்டத்தட்ட தோல்வி அருகே சென்று, வெற்றியை சுவைத்தது. அதேபோல பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியபோது முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 (20 ஓவர்கள்) அடித்திருந்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடினார். அவரை எப்படி அவுட்டாக்குவது என்று புரியாமல் அஸ்வின் செய்த மன்கட் அவுட் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறுதான் இவ்விரு அணிகளும் வெற்றியை பெற்றுள்ளது.
 

kings eleven punjab

 

 

இன்று இவ்விரு அணிகளுமே நேருக்கு நேராக மோதுகிறது. என்னதான் ஈடன் கார்டன் மைதானம் மிகப்பெரிய மைதானங்களுள் ஒன்று என்றாலும், பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற பிட்ச் என்பதற்கு கேகேஆர் vsஎஸ்ஆர்எச் போட்டியே உதாரணம். கடைசி மூன்று ஓவர்களில் கூட மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க ஏற்ற ஒரு பிட்ச் அது. இதனால் இன்று டாஸில் வெற்றிபெறுபவர்கள் சேஸிங்கை எடுக்கதான் முற்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்டபோது பஞ்சாப் அணி டாஸில் வெற்றியடைந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. என்னதான் இது கடினமான இலக்கு என்று கருதினாலும் பஞ்சாப் அணி கிட்டத்தட்ட இந்த ஸ்கோருக்கு அருகே வந்துதான் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் ஆடக் கூடிய டீமிடம் நல்ல பேட்டிங் லைன் இருந்தால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். அதே பேட்டிங் லைன் சேஸிங் டீமிடம் இருந்தாலும் நிர்ணயித்த மிகப்பெரிய ஸ்கோரையும் அசால்ட்டாக அடிக்க இயலும். ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் என்று பார்த்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள். 
 

இதுவரை ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியும் பஞ்சாப் அணியும் 10 முறை மோதிக் கொண்டுள்ளது. அதில் கேகேஆர் அணி 7 முறையும் பஞ்சாப் அணி 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. மொத்தமாக இவ்விரு அணிகளும் 23 முறை மோதிக்கொண்டுள்ளது அதில் கேகேஆர் 15 முறை வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணி மிகவும் வலிமையாக இதுவரை இருக்கிறது. கேகேஆர் அணிக்கு  அண்டிரிவ் ரஸ்ஸலும், பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்லும்தான் கீ பிளேயர்களாக உள்ளனர். கேகேஆர் ஆடிய முதல் போட்டியில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனும் ஸ்பின்னருமான சுனில் நரேனுக்கு ஏற்பட்ட காயத்தினால் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல பஞ்சாப் அணியில் பூரனுக்கு பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 8.5 கோடிக்கு பஞ்சாப் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை இன்றாவது அணியில் சேர்ப்பார்களா ? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவருடைய பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு புதிராகவே இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திற்கு அவர் தேவையானவர் என்றே சமூக வலைதளத்தில் சொல்லி வருகின்றனர்.