இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டியில் விளையாடக் கூடாது என முன்னாள் வீரர் சேவாக் ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கிறது.
ஆனால், இந்தியாவும், தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணியும் 18ஆம் தேதி மோதுவிட்டு, அடுத்த நாளில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள முடியாது என்பதால், விரேந்தர் சேவாக் இந்த காலஅட்டவணையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்த அட்டவணையைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். உலகின் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்த நாளில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார்கள். குளிர்ச்சியான இங்கிலாந்திலேயே இரண்டு டி20 போட்டிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் இடைவெளி விடும்போது, வெப்பம் அதிகமுள்ள துபாயில் அதை ஏன் கடைபிடிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றால் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும். ஆனால், குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தேவைப்படுகிற நிலையில், போட்டி முடிந்த அடுத்த நாளே பாகிஸ்தானை எதிர்கொள்வது சரியான முடிவாக இருக்காது. இது பாகிஸ்தானுக்கே சாதகமாக அமையும். ஒருவேளை இந்த அட்டவணையை மாற்றமுடியாது என்று சொன்னால், இந்தியா இந்தத் தொடரில் விளையாடவே கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.