இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது உலகக்கோப்பை தொடர். இதில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்ரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் ஆல்-ரவுண்டர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் தற்போதைய டெல்லி கிழக்கு தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கவுதம் காம்பீர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது “என்னை பொறுத்தவரை இந்திய உலகக்கோப்பை அணியில் ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.
பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமாருக்கு கூடுதல் ஆதரவாக இன்னொருவர் தேவை. ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் அணியில் இருப்பதாக நீங்கள் கூறலாம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. அணிச்சேர்க்கை அமைப்பதில் சரியாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தமுறை உலகக்கோப்பையில் அனைத்து அணிகளும் ஒரு அணியை மற்றொரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனால் வலுவான போட்டி கொண்ட தொடராக இருக்கும். இந்த வடிவம்தான் உண்மையான உலக சாம்பியனை கொடுக்கும். வருங்காலத்திலும் இதேபோன்ற வடிவிலேயே அனைத்து உலகக்கோப்பை தொடர்களையும் நடத்துவதில் ஐசிசி கண்டிப்பு காட்ட வேண்டும். இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகளும் கவனிக்கப்பட கூடியதாக இருக்கும்’’ என்றார்.