சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பரங்கிப்பேட்டை கடல்சார் உயிரியல் புலத்தில் இளங்கலை மீன் வள அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வரப்படுகிறது. இதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் (ICAR) அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கிகாரத்தை நீட்டிப்பு செய்து வழங்கியுள்ளது.
இதனையடுத்து (பி.எப்.எஸ்சி)., இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணைவேந்தர் ராம.கதிரேசனிடம் அங்கிகாரம் பெற்ற சான்றிதழுடன் வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்நிகழ்வில் பதிவாளர் சீதாராமன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுடைநம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதகுறித்து கடல்சார் அறிவியல் புலமுதல்வர் மற்றும் கடல் உயிரியல் இயக்குநர் பேராசிரியர் கலைசெல்வம் ஆகியோர் கூறுகையில், மேற்கண்ட மீன்வள இளங்கலை படிப்பானது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 160 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், மற்றும் மாநில விவசாய மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சில மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்த அங்கீகார தரநிலைகளை அடைவது, கல்வி நிலைகளுக்கான நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அங்கீகாரம் காரணமாகக் கடல்சார் அறிவியல் புலத்திற்கும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு நிதி மற்றும் கட்டமைப்பிற்கான மத்திய அரசின் மானியமானது மற்ற வேளாண் மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.