கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது டிக்கிரி என்று யானையின் புகைப்படம். எலும்புகள் வெளியே தெரியும் நிலையில் நிற்கவே சிரமப்படும் இந்த யானையின் புகைப்படம் உலகம் முழுவதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படுவைத்து வழக்கம். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நேற்று இரவுடன் நிறைவடைந்தது இந்த திருவிழா. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற ஒரு பெண் யானை தான் டிக்கிரி. 70 வயதான டிக்கிரி உடல்நிலை சரியில்லாமல், உண்பதற்கு சரியான உணவு இல்லாமல், மெலிந்த உடலோடு இந்த திருவிழாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளது. தள்ளாடும் நடை, எலும்பும், தோலுமான உடல் என அதன் மோசமான நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் திருவிழாவில் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவிழாவில் இதன் நமெலிந்த உடல் வெளியே தெரியாதபடி மறைக்கப்பட்டாலும், சேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு இந்த டிக்கிரியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டது.
அந்தப் புகைப்படத்தில், "டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது’ என்று குறிப்பிடபட்டுள்ளது. இந்த யானையின் புகைப்படத்தை கண்ட பலரும் அதன் நிலை குறித்து, தேய்ந்து வரும் மனிதம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.