சேலத்தில் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட நான்கு இறைச்சிக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 70 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று ஏப். 4 ஆம் தேதி ஆணையர் சதீஸ் உத்தரவு பிறப்பித்தார். கோழி, ஆடு, பன்றி மற்றும் மீன் உள்ளிட்ட அனைத்து வகை இறைச்சிக் கடைகளுக்கும் இவ்வுத்தரவு பொருந்தும்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாள்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதாலும், இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததாலும் இத்தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இத்தடை உத்தரவை மீறி இறைச்சிக் கடைகள் திறக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 10 சிறப்புக் குழுக்களை சேலம் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே- 3) மாநகராட்சி ஆணையர் சதீஸ் உத்தரவின்பேரில், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சூரமங்கலம் சின்னம்மாபாளையம் முதன்மைச் சாலை, மணக்காடு, வீராணம் முதன்மைச் சாலை, நாராயணன் நகர் ஆகிய இடங்களில் நான்கு இறைச்சிக் கடைகள் தடை உத்தரவை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. மேலும், நாராயணன் நகரில் ஒருவர் வீட்டிலேயே கறியை வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்சொன்ன நான்கு இறைச்சிக் கடைகளையும் அதிகாரிகள் உடனடியாக மூடி சீல் வைத்தனர். 4 கசாப்புக் கடைகள் மற்றும் ஒரு வீட்டில் இருந்து 70 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 27 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இறைச்சிக் கடைக்காரர்கள் மீது, பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், நோய்த் தொற்று பரவும் வகையில் வியாபாரம் செய்ததாகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.