திருவள்ளூர் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக செயல்பட்ட பொன் மாணிக்கவேல் மீது குற்றவாளியைத் தப்பிக்கவிட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள உத்தரவிட்டது.
கடந்த 6 ம் தேதி பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது பெரிதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.மாணிக்கவேல் இக்குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொன் மாணிக்கவேல் மிகச்சிறந்த அதிகாரி. நான் அவருடன் பழகியவன். காவல்துறையில் உண்மையான அதிகாரியாக விளங்கியவர் அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இவர் சிலை கடத்தல் பிரிவிற்குள் போன பின்புதான் பல உண்மைகளைச் சொன்னார். 2019 ஜூலை 24ம் தேதி உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை மாற்ற வேண்டும் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடினார்.
அதே நாள் பொன் மாணிக்கவேலின் வழக்கறிஞர், தமிழகத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது எனக் கூறினார். ஆகவே எடப்பாடி பழனிசாமி பொன் மாணிக்கவேலின் விசாரணையைத் தடுத்து சிபிசிஐடிக்கு மாற்றி அந்த இரு அமைச்சர்களைக் காப்பாற்ற இவ்வாறு செய்கிறார்.
தமிழக மக்கள் வணங்கும் கடவுள் சிலைகளைக் கடத்துவதற்கு யார் யார் முற்பட்டார்களோ அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்ததாகப் பொன் மாணிக்கவேல் சொல்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரை மாற்ற முயன்றது, சட்டமன்றத்தில் அதைப் பற்றிப் பேசியது பழனிசாமி தான்.
இப்பொழுது எனது கேள்வி எல்லாம் அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? அதில் பழனிசாமியும் இருக்கிறாரா? என நான் சந்தேகப்படுகிறேன். பொன் மாணிக்கவேல் அதைத் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.