பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தை நாகை மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடத்தினர். அந்த கூட்டத்தில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மீனவ பஞ்சாயத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் டீசல் விலை உயர்வு, மீனவரகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிவருவது, உள்ளிட்ட மீனவர்களின் பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து பேசினர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மீனவர்கள், "மத்திய அரசின் டீசல் விலை உயர்வை கண்டித்தும், இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், வருகின்ற 3 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், அதனை தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவுசெய்துள்ளோம்," என்றனர்.