அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதனையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் உச்சநீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு உங்களுக்கும் பொருந்தும் எனவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இது தொடர்பாக பதிலளிக்க தேவையில்லை என சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.