வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் சென்னசமுத்திரம் கிராமத்தில் கடந்த வாரம் ரசாயன கழிவுகளை கிணற்றிலும், ஏரியிலும் கொட்டி வைத்திருப்பதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவதிற்கு புகார் வந்தது. இதுகுறித்து வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏரியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ரசாயன கழிவு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது.
இதனை கொட்டி வைத்தவர்கள் யார் என்று, வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா, சென்னசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான பாண்டியன் என்பவர் தனது லாரியில், காஞ்சிபுரம் மாவட்டம் , கண்டிகையில் உள்ள ஸ்டார் லெதர்ஸ் தோல் தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகளை ஏற்றி வந்து சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் கொட்டி வைத்திருந்ததாகவும், பிறகு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவற்றை எடுத்துச்சென்று சென்னையில் உள்ள அதே தொழிற்சாலையில் திரும்ப வழங்கினார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பாண்டியனை அழைத்து விசாரித்தபோது அவரும் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கிணற்றில் எஞ்சியுள்ள ரசாயன கழிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் ஆய்வுக்காக சேகரித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின்பேரில் சென்னசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரவு நேரங்களில் தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன கழிவுகளை லாரிகளில் எடுத்துவந்து நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கொட்டிவிடும் குற்றச்செயல்கள் அவ்வப்பொழுது தெரியவருகின்றது. இது நீர்நிலைகளையும் பொதுமக்கள் உடல் நலத்தையும் கடுமையாக பாதிக்கும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணிப்பேட்டை சார் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுப்பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தொழிற்சாலைகள் இதற்கு முன்பு பாலாற்றில் தங்களது கழிவுநீர், ரசாயண தண்ணீரை திறந்துவிட்டனர். பாலாறு தற்போது கண்காணிப்பில் இருப்பதாலும், மழை குறைவாக இருப்பதால் பாலாற்றில் தண்ணீர் போகாததால் டேங்கர் லாரி வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து அதனை கொண்டு சென்று ஏரியில், கிணறுகளில் கொட்டச்சொல்கின்றனர். பணத்துக்காக அதனை டேங்கர் லாரிகள் கொண்டு வந்து இப்படி குடிக்கும் நீரில் கலந்துவிடுகின்றனர். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறோம் என்றார்கள்.