
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபத் பகுதியை சேர்ந்த இர்ஃபான் என்பவர் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் இர்ஃபான் வழக்கம்போல் நேற்று முன்தினம்(7.4.2024) வீட்டில் இருந்து மிதிவண்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் இஃர்பானை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இர்ஃபான் உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இர்ஃபானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இஃர்பானை கொலைச் செய்தது திருப்பத்தூர் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் சல்மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சல்மானை தேடி வந்த நிலையில், அவர் பிடிக்க எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த சல்மானை கைது வாணியம்பாடி அழைத்து வந்து விசாரணை நடத்தியது. அதில், இர்ஃபானின் மனைவி ஹாஜிராவுக்கும், அவருடைய(ஹாஜிரா) தங்கையின் கணவர் சல்மானுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுகுறித்து சல்மானின் மனைவி கடந்த ஆண்டுக்கு முன்னரே திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் போலீசா அழைத்துப் பேசி அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹாஜிராவை சல்மான் வேலைக்காக வெளிநாடு(துபாய்) அனுப்பி வைத்த நிலையில் அப்போது இருந்தே, இஃர்பானுக்கும் சல்மானுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஹாஜிராவும் சல்மானும் நெருக்கமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இர்ஃபானின் 3 குழந்தைகளில் இரு குழந்தைகள் சல்மானிடம் வளர வேண்டும் என்றும், 6 மாதத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு ஹாஜிராவும் சல்மானுடன் தான் வாழத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹாஜிரா கூறிப்படி சல்மான் இரு குழந்தைகளை அழைத்துவர இர்ஃபானின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இர்ஃபான் குழந்தைகளை அனுப்ப மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சல்மான் இர்ஃபாணை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி இர்ஃபான் தனியார் பள்ளிக்கு காவலாளி வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகர போலீசார் சல்மான் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணத்தை மீறிய உறவால் மனைவியின் ஆண்நண்பரால், கணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.