மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கிடப்பில்போட வலியுறுத்தி SDPI கட்சி, சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்றியமையா பொருட்கள் திருத்த சட்டம் 2020, வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு எளிமைப்படுத்தும் சட்டம் 2020, உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பன்னை சேவை ஒப்பந்த சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. இந்த சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவருகிறது.
அந்தவகையில் வேளாண் அவசர திருத்த சட்டத்தை கண்டித்து நாகப்பட்டினம் தபால் நிலையம் அருகில் SDPI நாகை மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு SDPI கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடியே சட்ட நகல்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து SDPI நாகை மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் கூறுகையில், “சாதாரண அடிப்படை சிந்தனைக்கூட இல்லாமல் கடிவாளம் கட்டிய குதிரையை போல, மத்திய மோடி அரசு கொண்டுவரும் ஒவ்வொரு ஆபத்தான சட்டங்களுக்கும் ஏகோபித்த ஆதரவை தெரிவிக்கும், மாநில எடப்பாடி அரசு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேளாண்மை திருத்த சட்டத்திற்கும் முதல்வரிசையில் நின்று முழு ஆதரவைத் தெரிவித்து, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. டெல்டா மாவட்ட அமைச்சர்களும்கூட விவசாயிகளின் நிலை அறியாமல் இந்த சட்டத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என நா கூசாமல் பொய் சொல்கின்றனர். இந்த சட்டத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பது அவர்கள் மனசாட்சிக்கு தெரியும். பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்படி ஒரு பொய்யை சொல்லி விவசாயிகளை கார்ப்ரேட்டுகளிடம் அடமானம் வைக்க துடிக்கிறார்கள், இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக சட்டத்தை கிடப்பில் போடவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.