தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தலைமையில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளது, அந்த பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காண்பதுதான் முதல் பணியாக தற்போது செய்து வருகிறோம். அதில் குறிப்பாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் இரண்டு நாட்களுக்குள் கிடைக்கும் படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்தவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பட்டா வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே ஒரு மனிதன் 30 ஆண்டு காலம் ஒரே இடத்தில் இருந்து அந்த இடத்தை தனக்கு பட்டா செய்து தருமாறு கோரிக்கை மனுக்களை கொடுக்கும் போது அவற்றை எப்படி சட்டரீதியாக நிவர்த்தி செய்து கொடுப்பது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதனை செய்ய தயாராக இருக்கிறோம்.
அதேபோல் முதியோர் தொகையானது தகுதி உள்ளவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அத்தனை பேரையும் முழுமையாக கணக்கெடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டும்.
பட்டா வழங்குவதில் மிக முக்கிய பிரச்சனை என்னவென்றால் நில அளவையர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக கிராம நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு அந்த பணிகளை செய்து வருகிறோம். விரைவில் நிரந்தர நில அளவையர்கள் நியமிக்கப்படுவார்கள். விமான நிலைய விரிவாக்கத்திற்கு 20 ஹெக்டேர் நிலத்திற்கு உரிய பணத்தை வழங்கியுள்ளோம். இந்த கூட்டத்தின் நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை குறித்து முழுமையாக அறிந்து புரிந்து அவற்றிற்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் நடந்தது” என்று தெரிவித்தார்.