சிதம்பரம் அருகே 3 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த கட்டிட தொழிலாளிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாதர் சங்கம் வரவேற்று சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (34). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி சிதம்பரம் அருகே தீர்த்தம் பாளையம் கிராமத்தில் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தேடியபோது அருகில் இருந்த கரும்பு தோட்டத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்தனர். அப்போது, கட்டிட மேஸ்திரி பழனிச்சாமி சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கிராம மக்கள் பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில் 55 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த இரு தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அறிந்த இந்திய ஜனநாய மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழி, நிர்வாகிகள் மல்லிகா,அமுதா ஆகியோர் சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமியின் குடும்பத்திற்கு தீர்ப்பின் விபரம் குறித்து விளக்கி கூறி ஆறுதல் கூறினார்கள். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தேன்மொழி இந்த சம்பவம் நடைபெற்ற போது இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் செய்தோம். தற்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கதக்க வகையில் உள்ளது. மாவட்டத்தில் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் ஏற்படும் குற்றசெயல்களை குறைக்க மாவட்ட காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்றார்.