அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து, 'அ.தி.மு.க.வை காப்பேன்' என உறுதிமொழி ஏற்க வேண்டும். இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையைச் சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க.வை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்கும்தான் இயக்கம் சொந்தம். அ.தி.மு.க.வை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசிப்படுத்தியோ வாங்க முடியாது. நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள். எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்து எப்படியாவது நம் படையை வீழ்த்த தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். எதிரிகளுக்கு நம் உழைப்பால், உத்வேகத்தால், ஒற்றுமையால் மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தைக் கற்பிக்க வேண்டும். மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் மக்கள் விரோதிகளைத் தோற்கடிக்க வேண்டும். வரும் தேர்தலில் வெற்றி பெற்று, எதிரிகளை வீழ்த்திக் கோட்டையில் நம் கொடியைப் பறக்கச் செய்வோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.