காங்கிரஸ் சீனியரான சோனியா காந்தியும், இந்த நேரத்தில் அதிரடியாக் களமிறங்கி தொழிலாளர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் என்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று போராட ஆரம்பித்தார்கள். இதனால், ரயில் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசு முன்வந்தது. அப்படிச் செல்லும் தொழிலாளர்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவிக்க, காசில்லாத தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதைக் கவனித்த கர்நாடக முன்னாள் அமைச்சரான சிவக்குமார், வெளி மாநிலங்களிலுள்ள கன்னடர்களை அழைத்து வரும் செலவை, கர்நாடக காங்கிரஸ் ஏற்கும் என்று அறிவித்து, அதற்கு ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தைக் காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று சோனியா அறிவித்தார். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் இதையே ஃபாலோ செய்தார்கள். அந்த வரிசையில் தமிழக காங்கிரசும் அடக்கம். சோனியாவின் இந்த அதிரடியில் ஆடிப்போன மத்திய அரசு, பயணிகளின் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என்று அறிவித்துள்ளது.