இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மற்றும் துறையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “2023 - 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் அறிவிப்பு எண் 50ல் மயிலாப்பூர் முண்டகக்கன்னி திருக்கோவிலின் உப கோவிலாக இருக்கக்கூடிய திருவள்ளுவர் திருக்கோவிலை ரூபாய் 15 கோடி செலவில் முழுவதுமாக புனரமைப்பது என அறிவிக்கப்பட்டது. அறிவிப்புக்கு ஏற்ப மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட இருக்கும் திருக்கோவிலின் மாதிரி வரைபடத்தை முழுமையாகப் பார்த்து திருக்கோவிலையும் ஆய்வு செய்துள்ளோம்.
கலைஞர், வள்ளுவருக்கு கோட்டத்தைக் கண்டவர்; கன்னியாகுமரியில் சிலை அமைத்தவர்; திருக்குறளுக்கு உரை எழுதியவர். அந்த வகையில் 500 ஆண்டுகளுக்கு மேலான 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவள்ளுவரின் கற்சிலையைப் புதுப்பித்து இந்த இடத்தை பக்தர்கள் விரும்பி வரும் இடமாகவும் சுற்றுலாத்தலமாக ஆக்கவும் கலைஞரின் மகன் தற்போதைய முதலமைச்சர் 15 கோடி செலவில் இதைப் புனரமைத்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்” எனக் கூறினார்.