இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட வேகமாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையைத் தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (14.04.2021) பிரதமர் மோடி, கரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இரவுநேர ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வரும் 18 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சில மாணவர்கள், தேசிய தேர்வு வாரியத்திற்குக் கடிதம் எழுதியிருந்தனர்.