Skip to main content

விமானத்தில் கொசுவா? - நாட்டை விட்டு வெளியேறு! (வீடியோ)

Published on 10/04/2018 | Edited on 10/04/2018

விமானத்திற்குள் கொசுக்கள் அதிகமாக இருப்பதாகக் கூறிய பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பெங்களூரு வரும் இண்டிகோ விமானத்தில், சவுரப் ராய் எனும் மருத்துவர் சக பயணிகளுடன் பயணத்திற்காக காத்திருந்தார். விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், விமானத்தில் கொசுத்தொல்லை காரணமாக பயணிகள் கையில் இருக்கும் காகிதங்களால் விரட்டுகின்றனர். இந்த சமயம், விமானத்தில் இருந்த சவுரப் ராய் கொசுத்தொல்லை குறித்து விமான ஊழியர்களிடம் முறையிட்ட நிலையில், அது பின் வாக்குவாதமாக மாறியுள்ளது.

 

 

இதையடுத்து, சவுரப் ராய் வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். இதுகுறித்து, விமான சேவை நிர்வாகம், ‘விமானத்தில் கொசு இருந்ததாக அந்தப் பயணி குற்றம்சாட்டியபோது, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இருந்தும் அவர் மற்ற பயணிகளை சேர்த்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார். விமானத்தைக் கடத்தப்போவதாகவும் மிரட்டினார். மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி அவரை கீழே இறக்கிவிட்டோம்’ என விளக்கமளித்துள்ளது. 

 

 

விமானத்தில் இருந்து கீழிறக்கி விடப்பட்ட சவுரப் ராய், ‘பிரச்சனை குறித்து பேசியதற்காக அவர்கள் என் சட்டை காலரைப் பிடித்து, வலுக்கட்டாயமாக கீழிறக்கிவிட்டார்கள். உங்களுக்கு கொசுக்கள் பிரச்சனை என்றால், இந்தியாவை விட்டே ஏன் இன்னமும் வெளியேறாமல் இருக்கிறீர்கள்? என கேள்வியெழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்