டார்க் வெப்பில் அமெரிக்கர்களின் லட்சக் கணக்கான சமூகப் பாதுகாப்பு எண்கள் நொய்டா செக்டார் 6ல் உள்ள ஒரு கட்டிடத்தில் முகாமிட்டு இயங்கும் அதிநவீன சைபர் கும்பலால் கசிந்துள்ளது. இந்த கம்பெனியில் இருந்து அமெரிக்கர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக் குழு அசல் அமெரிக்கர்களைப் போலவே பேசுவதற்கு வார்த்தை உச்சரிப்பு பயிற்சியும் பயின்றுள்ளது. இந்த சம்பவத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் கால்சென்டர் செயல்பாடுகளை கையாளுவதில் சரளமனாவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது. அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துவிட்டதாக கூறி பயமுறுத்துவதற்காக, அமெரிக்க சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின் பணியாளர்களைப் போல மிமிக்ரி செய்துள்ளனர். இந்த கும்பல். நிறைய நபர்களுக்கு விரித்த வலையில் சில பேர் வலையில் சிக்கியுள்ளனர்.
புதன்கிழமை மாலை, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்த வளாகத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது மிகப்பெரிய சைபர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக 84 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹர்ஷித் குமார் மற்றும் அண்ணா என்ற யோகேஷ் பண்டிட் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அந்த கால் சென்டர் 4 லட்சம் அமெரிக்க குடிமக்களை தொடர்பு கொண்டு 600க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளார்கள் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கால் சென்டரைத் தொடங்கியுள்ளனர். அலுவலகத்தில் 38 பெண்கள் உட்பட 84 ஊழியர்களுக்கு இந்த மோசடி பற்றித் தெரிந்தும் அவர்கள் அதிக ஊக்கத்தொகை பெற்றுவந்ததால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அவர்கள் ஊக்கத்தொகை பெறுவதால் வேலையையும் விடத்தயாராக இல்லை என டிஜிபி ஹரிஷ் சந்தர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை வழியாக நாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் வரை நிறுவனம் வருவாயை ஈட்டி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கால் சென்டரில் விசிடயல் மற்றும் ஐபீம் போன்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தி வந்ததாகவும் சந்தர் கூறினார். "சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கர்களின் சமூகப் பாதுகாப்பு எண் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கும் வகையில் செய்திகளை அவர்கள் அனுப்பியதோடு, பின்னர் குறிப்பிட்ட வேறொரு எண்ணுக்கு மீண்டும் அழைக்குமாறும் தெரிவித்து பிறகு தொடர்பு கொண்டுள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு எண் என்பது அமெரிக்க குடிமக்களுக்கு அவர்களின் வருமானத்தைக் கண்காணிக்கவும் அதன் மூலம் பலன்களைத் தீர்மானித்து இயங்க ஒதுக்கப்பட்ட ஒன்பது இலக்க தனிப்பட்ட எண்ணாகும்.
"ஒருவேளை முன்பு எச்சரித்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டால், கால் சென்டர் ஊழியர்கள் அமெரிக்கர்களின் தகவல்களை சரி பார்ப்பது போன்று, பெயர் மற்றும் அஞ்சல் குறியீடு விவரங்களைக் கேட்பார்கள். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் தங்களின் சமூகப் பாதுகாப்பு எண் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறுவார்கள். அடுத்து, அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்ணின் கடைசி நான்கு இலக்கை பகிர்ந்து கொள்ள சொல்வார்கள். அவர்கள் அந்த எண்ணைப் பகிர்ந்தவுடன், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் வாகன மோசடி போன்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இந்த எண்ணுடன் தொடர்புள்ளது என்று தெரிவிப்பார்கள்" என டி.ஜி.பி கூறினார். மேலும், திருட்டு வழக்கு பதிவு செய்யப்போவதாக உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பயமுறுத்துவர் என்றும் சொல்லப்படுகிறது.
"இந்த கும்பல் பாதிக்கப்பட்டவரிடம் தனது வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி, அந்த அழைப்பு அமெரிக்க மார்ஷல்ஸ் சேவைக்கு மாற்றப்படுவதாகக் கூறுவர். தொலைபேசி அழைப்பு மாற்றப்பட்ட பிறகு, மோசடியில் தொடர்புடைய மற்றொரு நபர் தன்னை ஒரு அமெரிக்க மார்ஷல் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி உரையாடலை தொடங்குவார். பின்னர் அவரின் வங்கிக் கணக்கு கைப்பற்றப்படும் என்பதால், கிரிப்டோகரன்சி அல்லது பரிசு அட்டைகள் வடிவில் பணத்தைச் சேமிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுறுத்துவார். பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை கிரிப்டோவாக மாற்ற முன்வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கிரிப்டோவிற்கான குறியீட்டு என்னை இந்த கும்பல் வழங்கும். இந்தக் குறியீட்டை, பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் தருவாயில் கும்பலின் வங்கி கணக்கிற்கு அவர்களின் பணம் மாற்றப்படும். மாறாக அவர்கள் பரிசு அட்டைகளை வாங்கினால், மோசடிக் கும்பல் அட்டையில் உள்ள ரகசிய எண்ணை எடுத்து பணத்தை பறித்துவிடுவர்" என்று டிஜிபி தெரிவித்தார்.
கால் சென்டர் ஊழியர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், 150 கம்ப்யூட்டர்கள், ரூ.20 லட்சம் ரொக்கம், மற்றும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தடயவியல் மற்றும் சைபர் துறையினர் தற்போது கணினிகளை சோதனை செய்து வருகின்றனர்.