Skip to main content

லக்கிம்பூர் வன்முறை: நாளை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

congress

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

 

இந்தநிலையில் நேற்று (03.10.2021) உத்தரப்பிரதேசத்திற்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணைய சேவை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சாஷாஸ்திர சீமா பால் படையினரும், மத்திய அதிவிரைவு படையினரும் வரும் ஆறாம் தேதிவரை லக்கிம்பூர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டிருப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

மேலும், மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் பிரதமர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசியுள்ள உத்தரப்பிரதேசத்தின் ஏடிஜி (சட்டம் & ஒழுங்கு) பிரசாந்த் குமார், நேற்று உயிரிழந்த நான்கு விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் உத்தரப்பிரதேச அரசு 45 லட்ச ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்துவார் என தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில் லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "பிரியங்கா காந்தியும் தீபேந்திர ஹூடாவும் லக்கிம்பூர் கெரிக்குச் செல்லும் வழியில் சீதாபூரில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹூடா தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களை சுதந்திரமாக பயணம் மேற்கொள்வதிலிருந்து தடுக்கும் இந்த நடைமுறை மிகவும் அபாயகரமானது. பிரியங்காவை விடுதலை செய்ய வேண்டும். நாளை நாடு முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும். லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் பிரதமரையும், உத்தரப்பிரதேச முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்