அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்குச்சாவடியில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைக்குக் காலை தொடங்கிய வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதோடு, சில இடங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தவும்பட்டது. அந்தவகையில், மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இருக்கும் செல்லூர் ராஜூ, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்யச் சென்றார். அப்போது அவர் வாக்களித்து முடித்த பின்னர், விவிபேட் இயந்திரத்தில் தனது ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதற்காக நின்றுள்ளார். ஆனால், விவிபேட் இயந்திரத்தில் அவரின் வாக்கிற்கான ஒப்புகை சீட்டு வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டதோடு, தனது வாக்குப் பதிவாகியதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குச்சாவடியிலேயே செல்லூர் ராஜூ அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட அந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பரிசோதித்து அவரது வாக்கு பதிவாகியிருப்பதாகக் கூறிய பிறகே, செல்லூர் ராஜூ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இந்த வாக்குச்சாவடியில் சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமானது.