தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடையும். வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 22ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 என்றும் அறிவித்திருந்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆகியவற்றை முடித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கலைத் துவங்கியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று (15.03.2021) அயனாவரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், திறந்த ஜீப்பில் நின்றபடி அத்தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். 1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின், 9வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2011 மற்றும் 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.