Skip to main content

ராமஜெயம் கொலை வழக்கில் பேரம் பேசப்படுகிறதா? 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Ramajayam passes away case

திருச்சி பிரமுகரும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கொலை வழக்கில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்க முடியாமல் இருப்பதால், யார் குற்றவாளி என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க, எஸ்.பி. தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.க்கள், மூன்று ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து, குற்றவாளிகளென சிலரை சந்தேகப்பட்டு கட்டம் கட்டியது. ஆனால் அவர்களை வெளிச்சொல்வதில்தான், ஸ்பெசல் டீம் டி.எஸ்.பி.க்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குழுக்களுக்குள் ஏற்பட்டுள்ள சாதிய மோதல் குறுக்கிட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும் நபர்கள், சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சாதியினராக இருப்பதால், சந்தேகப்படும் நபர்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க பேரம் பேசுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு முக்கிய ரவுடியை குற்றவாளியென நிரூபிப்பதற்காகத் தொடர்ந்து பல ஆதாரங்களைத் திரட்டிவருகின்றனர். உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட ரவுடியை இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக மாற்றிவிடத் திட்டமிடப்பட்டு வருகிறது.

அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்ற ஆம்புலன்ஸ் நிறுவன உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ஆய்வாளர் செந்தில்குமார், கொலை செய்யப்பட்ட பிரபாகரனிடமிருந்து தொடர்ந்து பல மாதங்களாக பணம் வாங்கி வந்துள்ளார். ரவுடிகளைக் கண்காணித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் போட வேண்டிய அதிகாரி பணம் வாங்கிக்கொண்டு ரிப்போர்ட் போடாமல் இருந்துள்ளார். ஓ.சி.ஐ.யு. பிரிவில் டி.எஸ்.பி.யாக இருப்பவரும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் நெருங்கிய உறவினருமான அந்த அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிந்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார் என்றும், அவரிடமும் விசாரிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

ஆனால், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்குள் சாதிச் சண்டையிட்டு வருவதால், இந்த குழுவை முழுமையாகக் கலைத்துவிட்டு புதிய குழு அமைக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் இந்த குழுக்களை அழைத்து உயர் அதிகாரிகள் கண்டிக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. இவர்களுடைய சாதிய மோதல்களால், உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருவதாகவும், தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓ.சி.ஐ.யு.வில் பணியாற்றி வரும் அந்த அதிகாரியையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இதில் கவனம் செலுத்தினால்தான் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்வது சாத்தியப்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே.

-கீரன்