Skip to main content

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: ஜோதிமணி பேட்டி 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

rahulgandhi


முதலில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்றும். தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும், தனக்கு பிரதமர் ஆக வேண்மென்ற ஆசையோ லட்சியமோ இல்லை. கூட்டுத் தலைமையை ஏற்படுத்தலாமா? என்று நன்கு ஆலோசித்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதில் முழு வடிவம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிவரும் நிலையில் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என கூறியிருப்பது கூட்டணி முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியிடம் கேட்டோம்.

 

அதற்கு அவர் கூறியது…

 

தற்போது எதிர்க்கட்சிகள் நினைப்பது பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மோடி என்கிற தோல்வி அடைந்த பிரதம மந்திரி இந்த நாட்டை பொருளாதார அடிப்படையில் இருபது வருடங்களுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளார். ஐம்பது ஆண்டுகள் சமூக அடிப்படையில் பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளார். இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கிற ஆட்சியை, அந்த ஆட்சியின் தலைமையை அகற்ற வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும், மற்ற எதிர்க்கட்சிகளும் நினைக்கின்றன. 

 

 

 

பாஜகவையும், மோடியையும் அகற்றினால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். மிக ஆபத்தானவர்களின் கைகளில் இந்தியா இருக்கிறது. அதனை மக்கள் உணர்ந்துள்ளனர். 2014ல் பாஜகவுக்கு வாக்களித்த 31 சதவீதத்தினரில் பெரும்பாலானோர், தற்போது பாஜகவுக்கு எதிராகத்தான் உள்ளனர். இப்பொழுது பாஜகவுடன் தன்னை சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்வதே கூட தவறான விஷயமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் தெலுங்கு தேசம், சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விலகி ஓடுகின்றன.

 

தனக்கு பிரதமர் ஆக வேண்மென்று எந்த ஆசையும், லட்சியமும் இல்லை. எனது முதன்மையான நோக்கம் என்னவென்றால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக சொல்லிவிட்டார். அந்த முடிவை அவர் தெளிவாக எடுத்ததால்தான் நேற்று அவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் பிரதமர் வேட்பாளர்தான். அதில் என்ன சந்தேகம். அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். இதனால்தான் பிரதமர் ஆக வேண்டுமென்று தனக்கு ஆசையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

jothimani congress

2004ல் பாஜக அத்வானியை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டது. அப்போது காங்கிரஸ் கட்சி யாரையும் முன்னிறுத்தவில்லை. ஆனால் சோனியாகாந்திதான் கூட்டணியை முன்னின்று வழிநடத்தினார். மக்கள் சோனியா காந்திதான் பிரதமராவார் என்று முடிவெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவரோ அவரே பிரதமர் வேட்பாளர் என்று மக்கள் முடிவு எடுத்தனர். அதன்பிறகு சோனியா காந்தி தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று முடிவெடுத்து மன்மோகன் சிங்கை பிரமராக்கினார். 

 

இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி என்பதை தாண்டி, இரு தலைவர்களுக்கிடையேயான போட்டி என வந்துவிட்டது. இது பாராளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இப்படித்தான் நடக்கிறது. பல மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் முதல் அமைச்சர் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

 

 

 

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் உள்ளது. பாஜகவை நேரடியாக பல மாநிலங்களில் எதிர்க்கொள்கிற கட்சி என்கிற முறையிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் மனதில் உள்ள கட்சி என்கிற முறையிலும், காங்கிரஸ் கட்சித்தான் கூட்டணி கட்சிகளை வழி நடத்த முடியும். இதனை பல கூட்டணிக் கட்சித் தலைவர்களே சொல்லிவிட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியும் இதனை உணர்ந்துவிட்டது. ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியும் விரைவில் இதேபோல் வெளியேறும் என்றார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்