Skip to main content

உங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோபம்: மனஉளைச்சலோடு திரும்பிய ஓ.பி.எஸ்.

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
o panneerselvam - nirmala sitharaman


நிறைய கனவுகளுடன் டெல்லி பறந்த ஓ.பி.எஸ்., மிகுந்த மனஉளைச்சலுடன் சென்னை திரும்பியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகிய இருவரிடமும் மிகுந்த இடைவெளியை அண்மைக் காலமாக மேற்கொண்டுள்ளது பாஜக தலைமை. குறிப்பாக பிரதமர் மோடி. பிரதமரை சந்திக்க இருவரும் எடுத்து வந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில், அண்மையில் சென்னை வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தனது மகன் ரவீந்திரநாத்தை அனுப்பி சந்திக்க வைத்தார் ஓ.பி.எஸ். அந்த சந்திப்பில்,  எடப்பாடிக்கு எதிராக பல விவகாரங்கள் பேசப்பப்பட்டதாக அதிமுக தரப்பில் செய்திகள் கசிந்தன.

மேலும், பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை மகன் மூலம் ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.

வெங்கையாநாயுடுவும் பிரதமருக்கு நெருக்கமான சில அமைச்சர்களின் பெயர்களை சொல்லி அவர்களை சந்திக்குமாறு சொல்லியிருந்தார். வெங்கய்யாநாயுடு சொல்லியிருந்த அமைச்சர்களில் முக்கியமானவர் நிர்மலா சீதாராமன்.
 

 

 

தனது ஆதரவாளரான மைத்ரேயன் மூலம் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் முயற்சிகளை எடுத்தார் ஓ.பி.எஸ்.  மைத்ரேயனும் சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்து ஓ.பி.எஸ்க்கு தெரிவித்திருந்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களான கே.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் நேற்று டெல்லி சென்றார்.

டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.சையும் மற்ற தலைவர்களையும்  மைத்ரேயன் இரவு உணவுக்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அப்போது மோடிக்கு நெருக்கமான ராஜ்ய சபா எம்பி ஒருவர் , அங்கு வந்து ஓபிஎஸ்சை சந்தித்து சென்றதாக தகவல். பின்னர், மைத்ரேயன்  இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஓ.பி.எஸ். டீம் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியது.

நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது, தமிழக அதிமுக தொடர்பான பல்வேறு விவகாரங்களையும், எடப்பாடிக்கு எதிரான விசயங்களையும் விவாதிக்க திட்டமிட்டிருந்தனர். இதனிடையே, டெல்லி சென்ற ஓ.பி.எஸ். தொடர்பாக, அதிமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்தன. 

எடப்பாடி தரப்பு ஓ.பி.எஸ். சின் டெல்லி பயணத்தின் நோக்கம் குறித்து அறிய ஆர்வமாக இருந்தது. அதே சமயம், ஓ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்டு எடப்பாடி பேசும்போது, "உடல்நிலை சரியில்லாத தன்னுடைய சகோதரருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக இருந்தது. அதற்காக ராணுவ ஹெலிகாப்டரை கொண்டுவர முயற்சி செய்தபோது, அது கிடைக்கவில்லை. அப்போது ராணுவ ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து உதவி புரிந்தவர் நிர்மலா சீதாராமன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே டெல்லி வந்துள்ளேன்" என ஓ.பி.எஸ். தெளிவுப்படுத்தியிருந்தார்.

திட்டமிட்டப்படி நிர்மலா சீதாராமனை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்பட்டது ஓ.பி.எஸ். டீம். அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஓ.பி.எஸ்.ஸை சூழ்ந்தனர். பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை என்றாலும், டெல்லி வந்ததன் நோக்கம் குறித்து அவரிடம்  பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபடியே இருந்தததால், உணர்ச்சிவசப்பட்ட ஓபிஎஸ்,  தனது சகோதரருக்காக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரத்தை வெளிப்படுத்தியதுடன், நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தாகவும் கூறினார்.

ஓ.பி.எஸ்.ஸின் இந்த பேட்டி மீடியாக்களில் பரவியது. இந்த விஷயம் டெல்லியில் பரபரப்பாக எதிரொலிக்க, பாஜக தலைவர் அமித்ஷாவின் கவனத்திற்கும் சென்றது. உடனே அவர், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, "ஏற்கனவே ரபேல் விவகாரத்தில் உங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு தனிநபருக்காக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியிருக்கிறீர்கள். இது சட்ட மீறலாக போகும். உடனடியாக இந்த சந்திப்பை ரத்து செய்யுங்கள் " என்று கோபமாக பேசியிருக்கிறார்.

ஏற்கனவே, ஓபிஎஸ்சின் பேட்டியை அறிந்து டென்சனாக இருந்த நிர்மலா சீத்தாரமன், அமித்ஷாவின் கண்டிப்பும் அவரை மேலும் பதட்டமடைய வைத்தது. இந்த நிலையில்,  ஓ.பி.எஸ். டீம் சென்ற கார்கள் பாதுகாப்பு அமைச்சகம் உள்ள தெற்கு பிளாக்கின் உள்ளே நுழைகிறது. ஏற்கனவே சந்திப்புக்கு அனுமதி தரப்பட்டதால்தான் இவர்களின் கார்கள் அந்த வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன.

நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் வந்திருப்பதை செக்யூரிட்டி அலுவலர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அமித்ஷா பேசியதில் இருந்து டென்ஷனாயிருந்த நிர்மலா சீதாராமன், மைத்ரேயனை மட்டும் வரசொல்லுங்கள். மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கடும் கோபத்தை காட்டியிருக்கிறார். மைத்ரேயன் மட்டும் அனுமதிக்கப்பட்டு, தங்களுக்கு அழைப்பு இல்லை என்றதும் ஓ.பி.எஸ்., முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

தன்னை சந்தித்த மைத்ரேயனிடம், "" ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதை ஓப்பன் பிரஸ் மீட்டில் பன்னீர் செல்வம் சொல்வது சரியா? ஏற்கனவே பிரதமர் மோடி சொல்லித்தான் அதிமுகவில் இணைந்தேன் என்று அவர் உளறியிருக்கிறார். மீண்டும் ஏன் இப்படி பேசுகிறார்?  இது எவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு போய்விடும் என்பது தெரியுமா? " என மிகவும் கடிந்து கொண்ட நிர்மலா சீதாராமன், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துவிட்டார்.


ஓபிஎஸ்சின் உணர்ச்சிவயப்பட்டு பேசியதற்கு  மன்னிப்பு கேட்ட மைத்ரேயன், ஓபிஎஸ்சை சந்திக்குமாறு கேட்டிருக்கிருக்கிறார். ஆனால், அதற்கு நிர்மலா சீத்தாராமன் சம்மதிக்கவில்லை. இதனால் அப் செட் மூடிலேயே திரும்பிய மைத்ரேயன், நடந்ததை ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களும் அப்-செட்டானார்கள்.


நிறைய எதிர்பார்ப்புகளுடன் டெல்லி வந்ததன் நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற மனஉளைச்சலுடன் சென்னை திரும்பியது ஓபிஎஸ் டீம் ! சென்னை ஏர்போர்ட்டில், " எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என விரக்தியுடன் சொல்லிவிட்டு தனது இல்லம் சென்றடைந்தார் ஓபிஎஸ்! இதற்கிடையே, எடப்பாடியின் தளகர்த்தர்களான அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் டெல்லி செல்வது அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.