Skip to main content

"ஜெர்சியில தமிழ்நாடுன்னு பார்த்தாலே பயப்படுவாங்க..." - வட இந்தியாவை மிரள வைத்த தமிழர்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020


உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர் என்ற பழமொழி நம்மிடம் உள்ளது. உடலை வலிமைப்படுத்துதல், ஆரோக்கியமாக வைத்திருத்தல் முதலியற்றில் முனைப்பு கொண்ட சமூகமாகவே நாம் இதுவரை இருந்து வந்திருக்கிறமோம். பழங்காலத்தில் இளவட்ட கல்லை தூக்குவதில் ஆரம்பித்த அந்த முறை தற்போது பாடி பில்டிங் வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இது வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் தேடி போகின்ற ஒரு துறையாக அமைந்திருக்கின்றது.  அந்த துறையில் என்ன இருக்கும், எந்த மாதிரியான சாதக பாதகங்கள் இருக்கின்றது என்பதை தற்போது அந்த துறையில் சாதித்து வரும் மணிகண்டன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
 

xfg



உங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகளை கூறுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். 12ம் வகுப்பு படித்து முடித்த உடனே நான் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஜிம்முக்கு சென்றது அப்படியே பழகி விட்டது. அப்போ நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். அதனால் ஜிம்முக்கு தொடர்ந்து சென்றேன். அதுவே பேஷனாகவும், வாழ்க்கையாகவும் தற்போது மாறிவிட்டது. 12ம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தது தற்போது என்னுடைய பேஷனாகவே மாறிவிட்டது.  

12ம் வகுப்பு படிக்கும் போது நீங்க யோசித்து பார்த்தீர்களா, இரண்டு முறை மிஸ்டர் வேல்டு பட்டத்தை வாங்குவோம் என்று?

உடம்பை குறைப்பேன் என்று கூட யோசித்து பார்த்ததில்லை, உடம்பை குறைப்பதை மனதில் வைத்துத்தான் நான் ஜிம்மிற்கு முதலில் சென்றேன். 10 வருடத்துக்கு முன்பு இப்போது இருக்கின்ற வசதிகள் எல்லாம் அப்போது கிடையாது. உடற்பயிற்சி சார்ந்த பொருட்களும் அதிகம் இருக்காது, கோச் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் நிறைய கோச் இருக்கிறார்கள். அப்போது இதனை நான் ஆரம்பிக்கின்ற போது குறிப்பிட்டு சொல்லும் படியான பயிற்சியாளர்கள் என்று யாரும் கிடையாது. நானே ஓடுவேன், அடுத்தவர்களை பார்த்துத்தான் பெரும்பாலும் நான் உடர்பயிற்சிகளை செய்வேன். வேல்டு சாம்பியன் ஆவேன் என்று நான் கனவிலும் நினைத்தில்லை.  

ஒரு சராசரி மனிதனாக இருந்த உங்களிடம் வேல்டு சாம்பியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உந்து சக்தியாக எது இருந்தது? 

நான் சின்ன வயசிலேயே நிறைய கஷ்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்ததாக நினைக்கின்றேன். 12ம் வகுப்பு படிக்கும் போதே அதெல்லாம் என் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. நிறைய வேலைகளை அந்த வயதிலேயே பார்த்திருக்கிறேன்.

என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?

நிறைய வேலைகளை பார்த்திருக்கிறேன், டோர் டெலிவரி வேலை செய்திருக்கிறேன். கொரியர் டெலிவரி வேலை செய்திருக்கிறேன். ஹோட்டல்களில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்திருக்கிறேன். எல்லா வேலைகளையும் செய்திருக்கிறேன். நிறைய வாய்ப்புக்கள் இருந்தால் ஒன்று மாற்றி ஒன்று மனது செல்லும். ஆனால் நான் இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து வைத்திருந்தேன். 

நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக வேண்டும் என்றால் ஒரு பேட் பால் வாங்கினால் போதுமானது, ஹாக்கி விளையாட வேண்டும் என்று முடிவு செய்தால் ஹாக்கி மட்டை வாங்கினால் போதுமானது. ஆனால் உங்களுடைய வேலையில் இந்த மாதிரியான அம்சங்கள் இருக்காது. இதற்காக எப்படி பயிற்சி எடுத்தீர்கள், உங்களின் பயிற்சியின் அனுபவம் என்ன? 

ஜிம்முக்கு போனால் போதும், ஆனால் அதற்கு பின்னால் இருக்கின்ற செலவுகள் மிக அதிகம். மற்ற எந்த விளையாட்டை காட்டிலும் பாடி பில்டிங் அதிகம் செலவாகின்ற ஒரு விளையாட்டு. கிரிக்கெட், ஹாக்கி என்றால் அவர்களுக்கு ஆகும் செலவு என்ற அந்த பொருட்களை வாங்குவதற்கு ஆகின்ற செலவுதான். ஆனால், இதற்கு பொருட்களை விட உணவுக்கு, பராமரிப்புக்கு ஆகின்ற செலவு மிக அதிகம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் இதில் செலவு செய்ய வேண்டி வரும். நான் பெட் கட்டியே சொல்வேன், மற்ற எந்த விளையாட்டை காட்டிலும் இதில் செலவு என்பது மிக அதிகம். நான் பல்வேறு ஸ்போர்ட்ஸ் பிளேயர்களை நேரில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர்களை விட இதில் அதிகப்படியான செலவு ஆகும். இது இந்த ஸ்போர்ட்ஸின் ஒரு பகுதியாகவே நான் நினைக்கிறேன்.  

ஒரு கிரிக்கெட் பிளேயர் என்றால் அவர் கிரிக்கெட் அகாடமி வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அது இல்லாமலேயே அவரால் அந்த விளையாட்டில் சாதிக்க முடியும். ஆனால் பாடி பில்டிங்கில் மட்டும் எதற்காக ஜிம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படகின்றது, அந்த குறைபாட்டிற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள், அரசாங்கம் அதை முறையாக அங்கீகரிக்கவில்லை என்று கருதுகிறீர்களா? 

இதை இரண்டு விதமாகவும் சொல்லாம், ஒரு கிரிக்கெட் பிளேயர் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு பேட்டில் இருந்து ஹெல்மெட் வரை அனைத்திற்கும் ஸ்பான்ஸர் இருக்கும். ஆனால் இதில் அப்படியான ஸ்பான்ஸ்ர் கிடைப்பது ரொம்ப கடினமான ஒரு விஷயம். எனக்கே பார்த்தீர்கள் என்றால், நான் இரண்டாவது முறை உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வென்ற பிறகும் கூட எனக்கு ஒரு ஸ்பான்ஸர் கூட கிடைக்கவில்லை. நிறைய ஸ்போர்ஸில் உள்ள புகழ்பெற்றவர்கலின் பெயரை சொல்லும் போது அவர்களை எல்லாம் உங்களுக்கு தெரியும். ஆனால் என்னை உங்களுக்கு தெரியுமா? தெரியாது, ஏனென்றால் மீடியா வெளிச்சம் இதற்கு குறைவாக இருக்கும். அதையும் தாண்டி 2017ம் ஆண்டு இந்திய அரசின் சார்பாக கலந்துகொண்டுதான் வெற்றி பெற்றேன். இருந்தாலும் நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது. 

இந்திய அளவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு இருப்பீர்கள், வட மாநிலத்தவர்களை விட உடல் அளவில் சற்று பலவீனமாக தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்ற மித் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

நீங்கள் சொல்வது போல அது பொய்யான ஒன்றுதான். எனக்கு தென் மாநிலங்களை தேர்ந்தவர்களில் இந்த ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களை நிறைய பேரை தெரியும். அவர்கள் மிகவும் வலிமையானவர்கள் தான். குறிப்பாக தமிழகத்தில் இருந்து தற்போது உள்ள அனைவரும் உடல் அளவில் சிறப்பானவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருந்து வந்திருப்பதாக சொன்னாலே மிரட்டு போவார்கள், தமிழக ஜெர்சி அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இன்று இருக்கிறது. அது நமக்கு பிளஸ் பாயிண்டாகவே இருக்கிறது.