Skip to main content

உங்க மனைவிக்கு ஹார்ட் அட்டாக்... இப்படியே போய்டுவோம்னு நினைக்காதீங்க... ஐஐடி பாத்திமா தந்தை ஆவேசம்!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தற்கொலை விவகாரம் தமிழக, கேரள மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. "சுதர்சன் பத்மநாபன், மிலிண்ட் பிராமே, ஹேமச்சந்திர காரா ஆகிய மூன்று துணைப் பேராசிரியர்கள்தான் தற்கொலைக்கு காரணமானவர்கள்' என்று மரண வாக்குமூலம் எழுதியிருந்தும்... குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவல்நிலையத்தில் அழைத்துகூட விசாரணை நடத்தவில்லை போலீஸ். இந்நிலையில் தான், சென்னை வந்த பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் உறவினர்கள் தமிழக டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்ததோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களைச் சந்தித்து, "பாத்திமாவின் மரணத்துக்கு நீதி வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

fathima



"கான்ஃபிடரேஷன் ஆஃப் தமிழ்நாடு' மற்றும் "வேர்ல்டு மலையாளி கவுன்சில்' இணைச்செயலாளர் அன்வர் மூலம் சென்னை ஆயிரம்விளக்கிலுள்ள கேரளா ஹவுஸில் தங்கியிருந்த அப்துல் லத்தீப்பிடம் பாத்திமாவின் மரணப் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு சந்தேகங்களை அடுக்குகிறார் கண்ணீருடன்...
 

padmanaban



பாத்திமாவின் மரணத்தின் பின்னணியில் ஐ.ஐ.டி. துணைப் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட பெயர்கள் இருக்கும் ஆதாரத்தை தமிழகத்திலேயே வெளியிடாமல் கேரளாவிற்கு போய் வெளியிட்டது ஏன்?

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்: நான், சௌதி அரேபியாவில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போதுதான், ‘"உங்க மனைவிக்கு ஹார்ட் அட்டாக். ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்காங்க'’அப்படின்னு குடும்ப நண்பரும் கொல்லம் மேயருமான ராஜேந்திர பாபுவிடமிருந்து போன் வந்தது. நான் உடைஞ்சுபோயி அழுதுட்டேன். ஏர்போர்ட்டுல வந்து இறங்கி கார்ல வீட்டுக்கிட்ட வரும்போதுதான் என் மகள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கிற தகவலையே தெரிஞ்சுக்கிட்டேன். ஒருவேளை, சௌதியில இருக்கும் போதே உண்மைய சொல்லியிருந்தா, என்னை உயிரோடவே பார்த்திருக்க முடியாது. நான் சௌதியிலிருந்து கேரளா வந்து, பிறகு சென்னை வர்றதுக்கு தாமதமாகும்னுதான் மேயர் ராஜேந்திர பாபு, என் இன்னொரு மகளும் ட்வின் சிஸ்டருமான ஆயிஷா மற்றும் உறவினர்களான ஷைன் தேவ், டோஜோ, ஷமீர் உள்ளிட்ட வங்க சென்னை வந்துட்டாங்க. கோட்டூர்புரம் காவல்நிலையத்துல இருந்த செல்போனை பார்த்த ஆயிஷாதான், சார்ஜ் போட்டு ஓப்பன் பண்ணிப் பார்த்துருக்கா. அதுலதான், "எனது சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள்'னு பாத்திமா எழுதி வெச்சிருந்தது தெரியவந்திருக்கு. ஆனா, கோட்டூர்புரம் காவல்நிலைய போலீஸார் இதுகுறித்து கண்டுக்காம விட்டதாலும், போஸ்ட்மார்ட்டம் பண்ணி அவசர அவசரமா கேரளாவிற்கு அனுப்பினதாலும் ஊருக்குப் போயி பார்த்துக்கலாம்னு வந்துட்டாங்க.
 

professor



பாத்திமாவின் உடலை எடுத்துக்கொண்டு செல்ல அவசரப்படுத்தியது யார்? ஏன் அவசரப்படுத்தினார்கள்?

அப்துல் லத்தீப்: ஜி.ஹெச். மார்ச்சுவரிகிட்ட மேயர் ராஜேந்திர பாபு உள்ளிட்டவர்கள் இருக்கும்போது போலீஸோடு ஐ.ஐ.டி. நிர்வாகத்தினர் ரெண்டுபேரும் வந்திருந்தாங்க. எல்லாச் செலவையும் நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லி, என் பிள்ளையோட உடலை எம்பார்மிங் பண்றதுக்கும் ஏர்போர்ட் கொண்டுபோறதுக்கும் ஃபென் அண்ட் கோவிடம் புக் பண்ணினதும் அவங்கதான். ஆனா, பாத்திமாவின் சகோதரன் ஷமீர், "இப்படியே போய்டுவோம்னு நினைக்காதீங்க. திரும்ப வருவோம்'னு சொல்லிட்டுதான் வந்திருக்கான். அதான், திரும்பி வந்தோம். என் மகளோட மரணத்துக்கு நீதி கிடைக்கிறவரைக்கும் தமிழகத்தை விட்டுப் போகமாட்டோம்.

 

 

fathima father



கோட்டூர்புரம் காவல்துறையினர் கண்டுக்காம விட்டுட்டாங்கன்னு சொல்றீங்களே? நீங்க அன்றைக்கே அது தொடர்பாக புகார் கொடுக்காதது ஏன்?

அப்துல் லத்தீப்: கோட்டூர்புரம் எஸ்.ஐ. கலைச்செல்வி உள்ளிட்ட போலீஸாருடன் என் மகள் ஆயிஷா, ஐ.ஐ.டியிலுள்ள பாத்திமாவின் அறைக்குப்போயி பார்த்திருக்கா. பாத்திமாவோட துணி காயவைக்கிற கயிறுகூட சாதாரணமான கயிறுதான். ஆனா, பாத்திமா தூக்குப் போட்டுக்கிட்டது நைலான் கயிறு. அந்த நைலான் கயிறு எப்படி பாத்திமாவுக்கு கிடைத்ததுன்னு தெரியல. தூக்குல தொங்கின பாத்திமாவோட கால் கீழ தரையில படற மாதிரி இருந்திருக்கு. அந்த அறையை எங்க பையன் ஷமீர் போட்டோ எடுத்தபோது, தடுத்திருக்காங்க எஸ்.ஐ. கலைச்செல்வி உள்ளிட்ட போலீஸார். பாத்திமா, புத்தகங்கள் படிக்கிறான்னா அதை அப்படியே எடுத்த இடத்துல வைக்கக்கூடியவ. ஆனா, புத்தகங்கள் அவளோட அறையில அலங்கோலமா கிடந்திருக்கு. இதையெல்லாம் பார்க்கும்போது இது தற்கொலை மாதிரி தெரியல. கொலையாவும் இருக்கலாம்னு ஆயிஷா கோட்டூர்புரம் காவல்நிலையத்துல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கா. ஆனா, இன்ஸ்பெக்டர் சிரிச்சுக்கிட்டே... "அப்படியெல்லாம் இல்ல. இது, சூஸைடு தான்'னு சொல்லிட்டு, ஆயிஷா கொடுத்த கம்ப்ளைண்டை பதிவு பண்ணாம, ஐ.ஐ.டி. வார்டன் கொடுத்த புகாரின்பேரில் எஃப். ஐ.ஆர். போட்டிருக்காங்க. (ஆயிஷா கொடுத்த புகார் நகலைக் காண்பிக்கிறார்) அதுக்கப்புறம் தான், பாத்திமாவோட செல்போனில் தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. ஒருவேளை, செல்போன்ல இருக்கிற ஆதாரம் தெரிஞ்சிருந்தா கோட்டூர்புரம் போலீஸ் அந்த தடயத்தையே அழிச்சிருக்கலாம்.

பேராசிரியர்களால் எவ்வளவு நாட்களாக என்னமாதிரியான பிரச்சனைகள் பாத்திமாவுக்கு இருந்தது?

அப்துல் லத்தீப்: ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் ஃபர்ஸ்ட் ரேங் எடுத்து வேறு மாநிலத்துல சீட் கிடைத்தும், தமிழகம்தான் பாதுகாப்பானதுனு நினைச்சு நான்கு மாதத்துக்கு முன்னால, சென்னை ஐ.ஐ.டி.யில சேர்த்தோம். கடந்த ஒரு மாசத்துக்கு மேலதான் எப்போ போன் பண்ணினாலும் எஸ்.பி. என்கிற சுதர்சன் பத்மநாபன் பெயரை சொல்லி "வெரிபேட்… வெரிபேட்' என்று சொல்லிக்கிட்டே இருப்பா. அந்தப் பேரைச் சொல்லும்போதே ரொம்ப வேதனையா வெறுப்பாகிடுவா. ஊருக்கு வந்தப்போ நான், மனைவி எல்லோரும் ஆறுதல் சொல்லித்தான் அவளை அனுப்பி வெச்சோம். சாகுறதுக்கு முந்தைய நாள்கூட ஐ.ஐ.டி. ஹாலில் சோகமா நடந்துக்கிட்டே இருந்திருக்கா. கேண்டீன்ல உட்கார்ந்து ரொம்பவே அழுதுருக்கா. மூக்குத்தி போட்ட ஒரு அம்மா அவளைக் கூப்பிட்டு ஆறுதல் சொல்லி ருக்காங்க. சுடிதார் நாடாவை இடுப்புல கட்டினா வலிக்குதுன்னுதான் ஜீன்ஸ் பேண்ட் மாதிரியான உடைகளை வாங்கிக் கொடுத்தோம். ஆனா, சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் எந்தளவுக்கு நெருக்கடி கொடுத்திருந்தா நைலான் கயிறை கழுத்துல இறுக்கி தன்னோட உயிரை மாய்ச்சிருப்பான்னு யோசிக்கும்போதே இதயம் வெடிக்கிற மாதிரி இருக்கு.


மதரீதியான தாக்குதலால்தான் மனம் உடைந்து பாத்திமா தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

அப்துல் லத்தீப்: என் மகள் ஒரு என்சைக்ளோபிடியா. அந்தளவுக்கு திறமையானவள். எதையுமே புன்னகையோடு எதிர்கொள்ளக்கூடியவள். இவள் நன்றாக படிப்பதால் சக மாணவிகள்கூட கொஞ்சம் பொறாமையில்தான் இருந்திருக்கிறார்கள். வேண்டுமென்றே துணைப்பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மார்க்கை குறைத்துப் போட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் என்ன? பாத்திமாவுக்கு என்ன மாதிரியான ஹராஸ்மெண்ட் இருந்தது என்பதை காவல்துறைதான் முழுமையாக விசாரித்து சொல்லவேண்டும்.

பாத்திமாவின் மரணத்தில் வேறு என்ன மாதிரியான சந்தேகங்கள் உள்ளன?

அப்துல் லத்தீப்: தினமும் தன் அம்மாவிடம் பேசிவிட்டுத்தான் படுப்பாள் பாத்திமா. ஆனால், 8-ந் தேதி இரவு என் மனைவி போன் செய்தபோது அட்டெண்ட் பண்ணல. அதுக்கப்புறம், போன் பண்ணினபோது ஸ்விட்ச் ஆஃப். ஒருவேளை தூங்கியிருப்பான்னு நினைச்சுக்கிட்டா. ஆனா, அன்னைக்கு நைட் என் மனைவி ஒரு கெட்ட கனவு கண்டிருக்கா. இதனால இன்னும் பயமாகி காலையிலேயே பாத்திமாவுக்கு போன்பண்ண ஆரம்பிச்சுட்டா. ஆனா, போன் ஸ்விட்ச்டு ஆஃப். இதனால, பதட்டமாகி பக்கத்து ரூமுல இருக்குற மாணவிக்கு போன்பண்ணி பார்க்க சொல்லியிருக்கா. அந்த மாணவி போயி பார்க்கும்போது கதவு மூடப்பட்டிருந்திருக்கு. ஜன்னல் வழியா பார்க்கும்போதுதான் பாத்திமா தூக்கில் தொங்கிக்கிட்டிருந்தது தெரியவந்து ஹாஸ்டல் வார்டன்கிட்ட இன்ஃபார்ம் பண்ணினதா சொல்றாங்க. அதுக்கப்புறம்தான் என் மனைவிக்கு ஐ.ஐ.டி.யிலருந்து தகவல் கொடுத்திருக்காங்க. வழக்கு சி.சி.பிக்கு மாற்றியிருக்காரு கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் சார். நிச்சயமாக, என் மகளுக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்.

 

 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.