Skip to main content

“ராகுலை களத்தில் சந்திக்கத் தயாரென்றால் எதற்கு வழக்கு?” - காந்தராஜ்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

"If you are ready to meet Rahul on the field, why the case?" - Gandaraj

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்தை குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக நம்மிடம் மருத்துவர் காந்தராஜ் பகிர்ந்துகொண்ட கருத்துகள்...

 

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சூரத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சரி என்று சொல்லியிருக்கிறதே?

ராகுல் காந்திக்கு மோடியின் சொந்த ஊரான குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மோடியை பற்றி விமர்சிக்கக் கூடாது என்றால் அவர் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கக் கூடாது. குஜராத் நீதிமன்றங்களின் தீர்ப்புகளே வேடிக்கையாக இருக்கின்றன. மோடியின் கல்வித்தகுதி குறித்து ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அந்த வழக்கு தொடுத்தவர் மீதே நீதிபதி 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதுக்கு மேல் நீதிமன்றத்தைப் பற்றி பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறுவார்கள். நீதியை அவமதிக்கும் இடத்திற்கு நாம் எப்படி மரியாதை கொடுக்க முடியும். 

 

மோடி நேரடியாக இந்த வழக்கைத் தொடுக்கவில்லையே, மோடி என்ற சமூகம் தானே வழக்கு தொடுத்திருக்கிறார்கள்?

மோடி என்ற சமூகத்தைப் பற்றி அவர் பேசியிருந்தால் அந்த வழக்கைப் பற்றி நாம் பேச முடியாது. இன்றைக்கு நாடு முழுவதும் ஜாதி என்ற பீடிகையில் இருக்கிறது. விதவிதமான படங்களும் வந்து கொண்டிருக்கிறது. எந்த ஜாதியை பற்றி பேசினாலும் அது ஆபத்தில் தான் முடியும். 

 

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே?

அதெல்லாம் அந்தக் காலம்தான். தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளைத் தான் விமர்சிக்கக் கூடாது. தீர்ப்புகளை விமர்சிப்பதினால் தான் நாம் மேல்முறையீடு செய்கிறோம். அவர்கள் சொல்வது தான் சத்தியவாக்கு என்று நினைத்தால் எப்படி மேல்முறையீடு செய்ய முடியும்.

 

இந்த வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிந்துவிடுமே?

எதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நரேந்திர மோடியைத்தானே சொன்னார். மோடி இனத்தையே அவர் சொல்லவில்லையே.  

 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு தேர்தல் களத்தில் நின்று அவரை எதிர்கொள்ளத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறுகிறாரே?

இதை விட வேடிக்கையாகப் பேசுவதற்கு யாராலும் முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குவார்கள் என்று ஆரம்பக்காலத்தில் நான் சொன்னேன். அதன்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்க முடியாது. இதனுடைய விளைவு ராகுல் காந்தி இன்னும் ஒரு படி மேலே தான் செல்வார். ராகுல் காந்தி மணிப்பூருக்கு உள்ளே போகக் கூடாது என்று சட்டம் போட்டார்கள். ஆனால், மக்கள் ராகுல் காந்தி உள்ளே வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். பா.ஜ.க கட்சி சார்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தை விட மக்களின் போராட்டம் தான் பெரிதாய் இருந்தது.

 

மோடியின் செயல்பாடுகள் அனைத்தும் பார்த்தால் ராகுல் காந்தியை பிரதமராக அமர்த்தாமல் விடமாட்டார் போல் இருக்கிறது. இதனுடைய விளைவு, எதிர்க்கட்சிகளை சந்திக்க தைரியம் இல்லை. அவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்து, தான் பிரதமராக வேண்டும் என்று பார்க்கிறார் என்றுதான் வரும். ராகுல் காந்தி வரக் கூடாது என்று வழக்கு போட்டுவிட்டு அவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் நம்புவதற்கு மக்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள் இல்லை. 

 

பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் கூடினாலும் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், இவர்கள் எதிர்க்கட்சிகள் எல்லாம்  பிரிந்து செல்வார்கள் என்றுதான் கூறுகின்றனர். அவர்கள் சேர்ந்தால் என்ன, சேராமல் போனால் இவர்களுக்கு என்ன பிரச்சனை வந்தது? தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எத்தனை பேர் கூடினாலும் இவர்களுக்கு என்ன? அதனால் பா.ஜ.கவினருக்கு தைரியம் இல்லை. நேர்மையாக தேர்தல் நடந்தால் இவர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம்.