Skip to main content

‘சனாதனத்தால் பாதிக்கப்பட்டேன்...’ - முனைவர் ராமசுப்ரமணியன்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

I was affected by Sanathana.. - Dr. Ramasubramanian

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பெயர் வைத்தது சிறப்பு” என்று பேசியிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் வந்தன. இது தொடர்பாக அரசியல் விமர்சகர், கல்வியாளர் முனைவர் ராமசுப்ரமணியன் நமக்கு அளித்த பேட்டியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கு கொடுத்துள்ளோம். 

 

இது தொடர்பாக அவர், “இந்து மதத்தில் பல மூடப்பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அதனைத் தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களால் நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இதில், பெண்கள் கைம்பெண்கள் ஆகிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு மொட்டை அடித்துவிட வேண்டும். 

 

எங்கள் அப்பா தவறிவிடுகிறார். உடனே எங்கள் அம்மாவிற்கு மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார்கள். முன்னதாக என் அம்மாவின் அக்காவும், அவரது தங்கையும் கைம்பெண்கள் ஆனார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு மொட்டை அடித்து அவர்களுக்கு வெள்ளை புடவை உடுத்திவிட்டார்கள். அதேபோல், அம்மாவுக்கும் நடந்துவிட போகிறது என்று எங்களுக்கெல்லாம் நடுக்கம்; துடியாக துடித்துவிட்டோம். இறுதியில் ஒருவழியாக கடவுளின் அனுக்கிரகத்தால் அதனை நிறுத்திவிட்டோம். 

 

அதேபோல் என் சகோதரி நன்றாக படிப்பார். அவர் பூப்படைந்ததும் அவரை படிக்கக்கூடாது என்று நிறுத்திவிட்டார்கள். அவர் மனமுடைந்து அழுதுவிட்டார். ஆனால், அவரின் வைராக்கியத்தின் காரணமாக திருமணமான பிறகு இரண்டு குழந்தைகள் வந்தபிறகு அவர் படித்தார். இதுபோன்ற மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் வேண்டாம், அதனை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

 

அமைச்சர் உதயநிதி ஏன் கொசுவைப் பற்றி பேசினார் என்றால்; மலேரியா, டெங்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதெல்லாம் குறிப்பிட்ட வகையான கொசுக்கள் தான். அவற்றை ஒழிக்கவில்லை என்றால் நீங்கள் அந்த பிரச்சனைக்கு ஆளாவீர்கள். அதுபோல் சில மூடப்பழக்க வழக்கங்கள் சனாதன தர்மத்தில் இருக்கிறது; அதன் காரணமாக அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் எனும் வகையில் அவர் சொன்னார். அவரின் பேச்சை நான் முழுமையாக கேட்டேன். அதில் அவர் எங்குமே இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை” என்றார். 

 

முழு பேட்டி வீடியோவாக: