Skip to main content

2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 41 சீட் கிடைக்குமா?

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

 

 

கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸுக்கு கொடுத்த 41 சீட்களில் 20 சீட்களை திமுகவுக்கு ஒதுக்கியிருந்தால் ஆட்சியமைப்பது எளிதாக இருந்திருக்கும் என்ற பேச்சு அடிபட்டது. அதைவிட மொத்தமாக 234 தொகுதிகளிலும் உதயசூரியன் நின்றிருந்தால் நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை கைப்பற்றியிருக்கும் என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். 

 

கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய 40 இடங்களில் 32 இடங்கள் அதிமுகவுக்கு போய்விட்டன. இதற்கு காரணம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சோம்பேறித்தனமே என்று திமுகவினர் கூறினார்கள்.

 

dmk-congress

 


 

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுகவினர் தங்கள் உழைப்பை மட்டுமே கொடுப்பார்கள். ஆனால், அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற செலவை காங்கிரஸ் வேட்பாளர்கள் செய்வதில்லை. இதிலேயே கடைசி நேரத்தில் திமுகவினர் சோர்ந்து போவார்கள். பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களிடம் விலைபோன நிகழ்வுகளும் நடந்தேறியது என்கிறார்கள். மேலும் அனுபவமும், அறிமுகமும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக காங்கிரஸ் இறக்கியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

 

 

மதுரை மாநகருக்கு உட்பட்ட மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி காங்கிரஸில் அடையாளமே தெரியாத கார்த்திகேயன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜன் செல்லப்பா மீது ஏராளமான புகார்கள் இருந்தன. எளிதில் ஜெயிக்கக்கூடிய தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்ததை திமுகவினர் விரும்பவில்லை. இருந்தாலும், கடுமையாக உழைத்தனர். ஆனால், திமுகவினரைப் போல தேர்தல் முடியும்வரை தொகுதிக்குள் பம்பரமாய் சுற்றி வேலைசெய்யும் போக்கு காங்கிரஸ் கட்சியினரிடம் இல்லை என்கிறார்கள். 

 

இதையெல்லாம்விட, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் திமுகவினர் மனப்பூர்வமாக வேலை செய்வதில்லை. இதற்கு காரணம் காங்கிரஸில் கூடமாட வேலைசெய்ய தொண்டர்களே கிடையாது. முழுக்கமுழுக்க தங்கள் உழைப்பைக் கொடுத்து காங்கிரஸ் ஆட்களை ஜெயிக்க வைத்தாலும் தேர்தலுக்கு பிறகு திமுகவினரை அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்ற குறை திமுகவினரிடம் உள்ளது.

 


 

எனவே, கடந்தமுறை காங்கிரஸ் மட்டுமே திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், வரும் தேர்தலில் மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், விசிக ஆகியவையும் இருக்கின்றன.

 

 

எனவே, திமுக கூட்டணியில் திமுகவுக்கே பெரும்பகுதியான இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. சுமார் 190 இடங்கள் திமுகவும், 44 இடங்கள் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

 

மதுரையைப் பொருத்தமட்டில் இந்தமுறை அனைத்து தொகுதிகளும் திமுகவே போட்டியிடும் என்று மா.செ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக மதுரை வடக்குத் தொகுதிக்கு இந்தமுறை திமுக வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமாரை தோற்கடித்தே தீரவேண்டும் என்று தெற்கு மாவட்டச் செயலாளர் கூறிவருகிறாராம்.