கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயணித்தவர்கள் ஒவ்வொரு ஊரின் முனையிலும், ஒவ்வொரு சாலையின் திருப்பத்திலும் அந்த அறிவிப்பு பலகைகளை, பதாகைகளை தவிர்த்திருக்க முடியாது.
பலகை என்றால், பேருந்து நிறுத்த அறிவிப்பு பலகையோ, தனியார் விளம்பர பலகைகளோ தான். அதன் மீது காகிதத்தை ஒட்டி எழுதியிருந்தார்கள். பதாகைகள் என்றால், நான்கு முழ வேட்டியை பாதியாகக் கிழித்து, அதில் எழுதி கட்டி இருந்தார்கள். அதில் இருந்த வாசகங்கள் நெஞ்சை உருக்கக் கூடியவை.
"உதவிக் கரம் நீட்டுங்கள்", " இங்கு 135 குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள்", "உணவுப் பொருட்கள் வழங்கவும்", "கஜா புயல் நிவாரண முகாம்", "உள்ளே ஒரு கிலோமீட்டரில் முகாம் இருக்கிறது", இப்படியான அறிவிப்புகள் நீக்கமற நிறைந்திருந்தன.
அறிவிப்பு பலகைகள் மாத்திரமல்ல, சாலையோரங்களில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர், உதவி எதிர்பார்த்து. சாலை ஓரம் இருக்கும் சிறு பாலக் கட்டைகள், பேருந்து நிறுத்தங்கள், மரத்தடிகள், சில இடங்களில் ஏதுமற்ற வனாந்தரங்களிலும் மக்கள் அமர்ந்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து, கத்திமேடு, வடமழை, கரியாப்பட்டிணம் வழியாக வேதாரண்யம் நகரை அடைந்தோம். வேதாரண்யம் நகராட்சிக்குள்ளாகவே கடைகோடியில் இருக்கும் பகுதி. ஒரு சில ஓட்டு வீடுகளை தவிர்த்து, முற்றிலும் குடிசை வீடுகள். குடிசை வீடுகள் சீர்குலைந்து கிடந்தன. வீட்டை சுற்றிலும் இருக்கும் மரங்கள் சாய்ந்து கிடந்தன. இந்த மரங்களை எல்லாம் அகற்ற ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.
மின்சார வாரியத்தை சேர்ந்தவர்கள் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். " அண்ண, எந்த ஊர் நீங்க?", என்று விசாரித்தேன். "திருநெல்வேலி மாவட்டம் நாங்க. பத்து நாளா வேல செய்றோம்", என்றார்கள். புயல் நிவாரணப் பணியில் மிக சிறப்பான பணி, மின் வாரியத் தொழிலாளர்களுடையது. அதை எல்லா இடங்களிலும் காண முடிந்தது.
உதவிப் பொருட்களை வினியோகிக்க அந்த வட்டத்தின் தி.மு.க செயலாளரும், முன்னாள் கவுன்சிலரும் உதவினார்கள். பெண்கள் வந்து தங்களது ரேஷன் அட்டையை கொடுத்து விட்டு, வரிசையில் நின்றார்கள். சிறு சலசலப்பும் இல்லாமல் பொருட்களை பெற்று சென்றார்கள். இழப்பு மக்களை அந்த அளவிற்கு வாட்டி வதைத்திருக்கிறது.
வேதாரண்யம் நகரினுள் சென்றோம். நகர் பகுதியிலும் புயல் பாதிப்பு தெரிந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து, மீண்டும் நடப்பட்டிருந்தன. மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்துத் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் மீதும், கடைகள் முன்பும் உபயோகப்படுத்தப் பட்டிருந்த கால்வானிக் ஷீட் கூரைகள் கிழிக்கப்பட்டிருந்தன. நகரம் களை இழந்து, பெரும் சோகத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் சாயல் தெரிந்தது. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.
நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு நன்றியறிதலாக, முன்னாள் ச.ம.உ காமராஜ் அவர்களின் மகன் ராஜு தேநீர் அளித்தார். அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது பல செய்திகள் கிடைத்தன.
விவசாயிகளைப் போலவே, வேதாரணியம் பகுதியில் உப்பளம் முக்கியமான தொழில், வாழ்வாதாரம். பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலையும், வாழ்க்கையும் அளிக்கும் தொழில். கஜா புயலால் உப்பளத் தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொழில் சீராக மாதக் கணக்கில் ஆகும். அதுவரை அந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது, வருமானமும் இருக்காது.
வேதாரண்யம் பகுதியில் இருந்து தான் உப்பு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்கிறது. இந்தப் பகுதிக்கு பெரும் வருமானத்தை தரக்கூடிய தொழில் இது. குவித்து வைத்திருந்த உப்பும் நாசமாகி, இன்னும் சில மாதங்களுக்கு தொழில் சீராகாத நிலையில், இந்தப் பகுதியின் முக்கிய வருமானம் தடைபடும்.
விவசாயம், உப்பளம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வேதாரண்யம் பகுதியில் பணப்புழக்கம் இல்லா சூழல் ஏற்படும், பொருளாதாரம் பாதிக்கும்.
அடுத்து, கோடியக்கரை கிளம்பினோம்...
(தொடரும்...)