ஃபெட்னா (FETNA) என்ற பெயரில் இயங்கி வரும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டுதோறும் பெரிய அளவில் தமிழ் விழாவை நடத்திவருகிறது. தைத்திருநாள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் பண்டிகைகள் அவ்வப்போது கொண்டாடப்பட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறை 'பேரவையின் தமிழ் விழா' என்ற பெயரில், மிகப்பெரிய அளவில் ஃபெட்னாவால் நடத்தப்படும் இந்த விழா புகழ்பெற்றது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் வந்து பங்குபெற்று சிறப்பிக்கும் நிகழ்வாக இது அங்கு நடத்தப்படுகிறது. தமிழகத்திலிருந்து அறிஞர்களும் கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் வேரின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு கொண்டாட்டமாக நிகழ்கிறது. இந்த ஃபெட்னா (FETNA) அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நீட் எதிர்ப்பு மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தியது. இதில் அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு ஜூன் 29, ஜூன் 30, ஜூலை 1 ஆகிய மூன்று நாட்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் நடந்தது 'பேரவையின் தமிழ் விழா - 2018'. முதல் நாள் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் வெற்றிபெற்ற தொழிலதிபர்களின் உரைகள் இடம்பெற்றன. இதில் கூடுதல் சிறப்பாக 'சமூக பொறுப்புள்ள குடிமகன்' என்ற தலைப்பில் சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் திருமதி.சாந்தி துரைசாமி பேசினார். சக்தி மசாலா நிறுவனத்தின் சமூக செயல்பாடுகளில் முக்கிய பங்கு இவருடையது. அழுத்தமாகவும் ஆழமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் அமைந்தது இவரது பேச்சு. நிகழ்வினிடையே சக்தி மசாலா நிறுவனர் டாக்டர். துரைசாமியின் வெற்றிப் பயணத்தைச் சொல்லும் 'என்றும் நமதே' என்ற நூலை விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் வெளியிட நடிகர் கார்த்தி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பங்கேற்றார். இந்த நூலை இயக்குனரும் பத்திரிகையாளருமான டி.ஜே.ஞானவேல் எழுதியுள்ளார். அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஃபெட்னா ஒருங்கிணைப்பாளர்கள் செந்தாமரை பிரபாகர், கால்டுவெல் வேல்நம்பி ஆகியோர் உடனிருந்தனர். வாழ்வேனும் ஏணியின் கீழிருந்து மேலேறத் துடிப்பவர்களுக்கு உந்து சக்தியாக இந்த நூல் இருக்குமென கூறப்படுகிறது.