Skip to main content

"சுய முரண்பாடுகளின் மொத்த உருவமாக தமிழிசை இருக்கிறார்; தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார்.." - இள.புகழேந்தி தடாலடி

Published on 12/12/2022 | Edited on 13/12/2022

 

ரகத

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுவதற்குப் பதிலாக தமிழக முதல்வர் வேறு நல்ல பெயரை வைக்க வேண்டும் என்றுகூறியதோடு வேறு சில அரசியல் தொடர்பான பேச்சுக்களைப் பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகச் சிலர் சமூக ஊடகங்களின் ஆளுநர் தமிழிசை அவர்களின் பேச்சைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் இள.புகழேந்தி அவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


புதுவை ஆளுநர் முன்பு கிரண்பேடி போல் நான் செயல்படவில்லை, மற்றவர்களின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, மாநில மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் என்னிடம் அடுத்தவர்களோடு என் பணியை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. மாநில மக்களுக்காக எனது செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருக்கிறது என்று புதுவை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது. ஆனால் அதன் செயல்பாடு முதல்வரால் நடத்தப்படுகிறதா என்றால் இல்லை. அரசுடைய அனைத்து செயல்பாடுகளிலும் ஆளுநர் தலையிடுகிறார். ஆனால் தமிழிசை தற்போது அரசுக்கு ஒத்துழைக்கிறேன் என்று கூறுகிறேன். நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசும் போக்கு தமிழிசையிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. தேவையில்லாத வேலையை அவர் தொடர்ந்து செய்து வருகிறது. கேட்டால் நான் என்னுடைய ஆளுநர் வேலையைப் பார்க்கிறேன் என்று கூறுகிறார், அது உங்களுடைய ஆளுநர் வேலை? நான் அரசியல் பேசுவேன், கை,கால் என அனைத்தையும் வைப்பேன் என்று கூறுவதெல்லாம் ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையா?

 

எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளோம், யாராவது ஒருவர் இத்தகைய ஆணவத்தோடு பேசி பார்த்துள்ளீர்களா? தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, மாநில முதலமைச்சர்கள் எல்லாம் ஏதோ இவர்களுடைய வேலை ஆள் போல் தொடர்ந்து அவமரியாதை செய்வது, தேவையில்லாத இடங்களில் மூக்கை நுழைத்து அரசியல் செய்வது என்று தொடர்ந்து மக்கள் விரோத அரசியலை தமிழிசை அவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆனால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித தொல்லையையும் எப்போதும் அளிக்க மாட்டேன் என்ற கூறுவார். 

 

ஆனால் அவரின் நடவடிக்கை அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். அதுதான் அவரின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது. மாநில முதல்வரை விடத் தான் அதிக அதிகாரம் படைத்தவர் என்ற எண்ணம் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. அம்மாநில முதல்வரை ஒரு பொருட்டாகக் கூட அவர் மதிப்பதில்லை. அதனால் இந்த அத்துமீறலை நாம் தொடர்ந்து பொருத்து கொண்டு இருக்க முடியாது. அதனால் அவருக்குத் தார்மீக எதிர்ப்பை தமிழகத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது. அன்றைக்கு அனைத்து தமிழகத்தில் நுழைப்பேன் என்று தெனாவட்டாக பேசிய அவர், மாண்டஸ் பாதிப்பு குறித்தும், தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துக் கேட்கும் போது அடுத்த மாநிலத்தில் நான் மூக்கை நுழைக்கமாட்டேன் என்று தெரிவிக்கிறார். 

 

ஏனென்றால் இந்த புயலை அரசு சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அதனால் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்று கூறுகிறார். இதுவே அவரின் இரட்டை நிலைப்பாட்டைத் தெரிவிக்க போதுமான ஒன்றாகும். சுய முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தமிழிசை இருக்கிறார். மாற்றி மாற்றிப் பேசுவதை, தேவையில்லாத விஷயங்களில் கருத்து தெரிவிப்பது என்று ஆளுநருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவர்கள் யார் திராவிட மாடல் பெயரை மாற்றச்சொல்வதற்கு, இவர்கள் எங்களுக்கு ஆலோசனை,சொல்லுமளவுக்கு எங்களுக்கு அறிவில்லாமல் இல்லை, தமிழும் ஆங்கிலமும் தமிழகத்தில் எப்போதும் இருக்க வேண்டும் அதுவே அடுத்த கட்டத்துக்கு எதிர்கால மாணவர்களை இட்டுச்செல்லும் என்பது அண்ணாவின் கனவு. எனவே தேவையில்லாமல் எங்களைச் சீண்டாதீர்கள்.அது உங்களுக்கே பிரச்சனையாகப் போகும்.


 

 

சார்ந்த செய்திகள்