Skip to main content

"இடைத்தேர்தல் வந்தால் எடப்பாடியின் ஆளுமை தெரியும்; சின்னம் முடக்கப்பட்டால் பாஜக முக்கியக் காரணமாக இருக்கும்..." - எஸ்.பி. லட்சுமணன் பேட்டி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 

பர

 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக  பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கட்டும். இதைப்பற்றி பேசுவதற்குரிய நேரம் இப்போது இல்லை. தற்போது கூட்டணி தொடர்பாகப் பேசுவது எல்லாம் வேடிக்கையாகத்தான் போய் முடியும். தேர்தல் ஜுரம் தொடங்குவதற்கே இன்னும் ஒரு வருடம் முழுவதுமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் தொடர்வார்களா என்பது தெரியாது. 

 

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் தொடர்வார்களா அதுவும் தெரியாது, கடந்த தேர்தலில் எந்த அணியிலும் சேராதவர்கள் எந்த அணியில் சேர்வார்கள் என்பது கூட தெரியாது. திமுகவைக் கடுமையாக விமர்சித்த கமல் இன்று திமுகவோடு சேர வாய்ப்புள்ளதாகக் கூட செய்தித்தாள்களில் செய்தி வருகிறது. விவாதங்கள் நடக்கலாம். ஆனால் இதுதான் நடக்கும்; இது நடக்காது என்று சொல்வதற்குரிய நேரம் இதுவல்ல. வலுவான அதிமுக தேவை என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எதிர்பார்ப்பு. அதற்கு மாறாக யார் செயல்பட்டாலும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். அது கடந்த கால வரலாறு. 

 

எடப்பாடி அந்த மாதிரி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றால் அதில் எந்த அளவுக்கு அவர் உறுதிப்பட இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இதில் பாஜக ரோல் இல்லை என்றும் நாம் கூற முடியாது. தங்களின் தேர்தல் சுய லாபத்துக்காக அதிமுகவை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது பாஜக கைகளில் இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் கூட எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கூட அதிமுக வலுவாக ஒற்றுமையாக இருப்பதாக நான் பார்க்கமாட்டேன். உணர்வு ரீதியாகக் கட்சி பிளவுபட்டுள்ளதாகவே கருத வேண்டும். எடப்பாடி கைகளுக்குக் கட்சி சென்று நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் தலையில்லாத முண்டமாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

 

நாளைக்கே இடைத்தேர்தல் வந்தால் என்ன நிலைமை என்று கேட்கிறீர்கள், அவர்களுக்குச் சின்னம் கிடைத்துவிடுமா என்றால் அவருக்கே தெரியாது. கிடைக்காவிட்டாலும் கூட தேர்தலில் நிற்பார். பாஜக அரசியல் அங்குதான் செயல்படுத்தப்படும். சின்னம் இல்லை என்றால் தேர்தலைப் புறக்கணித்துவிட்டுப் போய்விடும் அளவுக்கு எடப்பாடி கடைசிக்கட்ட நிலைக்குச் சென்றுவிட்டதாக நான் இன்னும் நினைக்கவில்லை. ஆனால் அதிமுகவை அந்த இக்கட்டான நேரத்தில் எப்படி வழிநடத்திச் செல்கிறார் என்று மக்களும் பார்ப்பார்கள், தொண்டர்களும் பார்ப்பார்கள். அதுதான் மிக முக்கியமான ஒன்று. அதில்தான் அரசியல் வெற்றி இருக்கிறது. 

 

அதிமுக சின்னம் முடக்கப்பட்டால் அதற்குப் பின்னால் நிச்சயம் பாஜக இருக்கும். அதை யாருமே மறுக்க முடியாது. எதிர்பாராத விதமாகச் சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தால் கூட அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் பாஜக தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. எடப்பாடியின் ஆளுமை என்பது அப்போது அவர் எடுக்கும் முடிவுகளை வைத்துத்தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் ஒரு உண்மையை மறைத்து நான் அமித்ஷாவைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூற வேண்டியதில்லை" என்றார்.