Skip to main content

குடியுரிமை சட்டத்தில் அமித்ஷா போட்ட தப்புக் கணக்கு... நெருக்கடியில் பாஜக... பரபரப்பை கிளப்பிய மம்தா!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம்செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றிருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகி இருக்கிறது.

 

bjp



வடகிழக்கு மாநிலங்கள்தான் இதற்கெதிராக முதலில் எதிர்வினை ஆற்றின. துப்பாக்கிச்சூடு, தடியடி என எதுவொன்றாலும் அங்கு நடக்கும் போராட்டங்களைத் தடுக்க முடியவில்லை. வடகிழக்குப் பகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விவரிக்கும் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், "இங்குள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அமைச்சர்கள் மட்டுமின்றி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என அனைவருமே ராணுவ முகாம்களில்தான் தூங்குகிறார்கள். காஷ்மீரில் பத்து அடிக்கு ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரை நிறுத்தி வைத்திருப்பதால், இந்தப் பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மேற்குவங்கத்திலும் பர்துவான், முர்ஜிதாபாத், 24 பர்கனாஸ் ஆகிய பகுதிகளில் நிலைமை மிகமோசமாக இருக்கிறது. மாநில அரசு நினைத்தால் ராணுவத்தை அழைக்கலாம். அதற்கு தயாராக இல்லாத மம்தா, சமாதான பேரணியை நடத்துகிறார்.

 

mamtha



வடகிழக்கில் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு அணைய மறுக்கும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் 370 ஐ ரத்து செய்ததுபோல், குடியுரிமை சட்டத்திருத்தமும் மிகச்சுலபமாக இருக்கும் என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் பொய்த்துப்போனதால், இதைவைத்து அரசியல் லாபமடையப் பார்க்கிறது பா.ஜ.க. அரசியலமைப்புச் சட்டம் 356 ஐப் பயன்படுத்தி மேற்குவங்க அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவரவும் திட்டமிடுகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் மாணவர்களின் கொந்தளிப்பும் சேர்ந்திருப்பதால், பா.ஜ.க.வுக்கு நெருக்கடியே மிஞ்சியிருக்கிறது'' என்கிறார்.


வடகிழக்கு மாநிலங்களின் போராட்ட முழக்கம், இந்தியத் தலைநகரிலும் எதிரொலித்தது. தென்கிழக்கு டெல்லி பகுதியில் அமைந்திருக்கும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தைக் கையிலெடுத்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஜந்தர்மந்தர் நோக்கி பேரணியாக சென்ற அவர்களை சூர்யா ஓட்டல் பகுதியில் தடுப்புகளைக் கொண்டு தடுத்து நிறுத்தியது காவல்துறை.

 

 

protest



அங்கிருந்து கிளம்பிய மாணவர்கள் மாற்றுப்பாதையை முடிவுசெய்து, மாதா மந்திர் சாலையில் பேரணியைத் தொடர்ந்தனர். அங்கும் தடுப்புகளை ஏற்படுத்திய காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி மாணவர்கள் ஓடிச்சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், மாதா மந்திர் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டதாகவும், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனம் கொளுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக்கூறி, கண்ணீர் புகைக் குண்டுகளைக் காவல்துறை பயன்படுத்தியது. பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடிச்சென்ற மாணவர்களை துரத்திச்சென்ற காவல்துறையினர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரமாகத் தாக்கினர்.


மாணவர்கள் தாக்கப்படும் காட்சிகளும், மூங்கில் கம்புகளால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கழிவறைகளில் மயங்கிக் கிடக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு பதிலாக, மருத்துவ மனைகளில் சிகிச்சைக்குச் சென்றவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துவந்து அடைத்து வைத்ததாகவும் மாணவர்கள் தரப்பில் சொல்லப் பட்டது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 13 மெட்ரோ ரயில்நிலைய சேவையும், இணையசேவையும் துண்டிக்கப்பட்டன.

 

 

mathews



கைகளை தலைக்குமேல் உயர்த்தியபடி, தவறு செய்தவர்கள் உயிருக்கு அஞ்சி நடப்பதுபோல் மாணவர்கள் வழிநடத்தப்பட்டனர். அவர்களில் ஆத்திரமடைந்த மாணவி ஒருவர், "ஜாமியா பல்கலைக்கழகத்தில் எந்தவித போராட்ட அறிவிப்பும் இல்லாத நிலையில், நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் போலீசார் கடுமையாக தாக்கினார்கள். என்ன நடக்கிறது என்றுகூட நிதானிக்க விடாமல், பாத்ரூம்கள் வரை நுழைந்து தேடித்தேடி மண்டையை உடைத்தார்கள். சில காவலர்கள், மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவங்களும் அரங்கேறின. சி.சி.டி.வி. கேமராவில் எதுவும் பதிவாகி விடக் கூடாது என்பதற்காக, விளக்குகளை அணைத்து விட்டு துணை ராணுவத்தினர் பாலின பேதமில்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கினார்கள். சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தாலே உண்மைகள் வெளிவந்துவிடும். காவல் துறையினர் அதைக் கைப்பற்றுவதற்கு முன்னால், பத்திரப்படுத்தி இந்த வன்முறைக்கு இரையாகிய எங்களுக்கு நீதிவழங்க வேண்டும்'' என்றார் மிரட்சியான குரலில்.

 

sethupathy



கல்காஜி மற்றும் நியூ ஃப்ரெண்ட்ஸ் காவல்நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பலத்த காயங்களுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி காவல்துறை தலைமையகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு இரவு முழுவதும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத், சி.பி.ஐ. டி.ராஜா, சி.பி.எம். பிருந்தா காரத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இணைந்து கொண்டதால், பரபரப்பு கூடியது. ஐதராபாத், பாட்னா, பனாரஸ், அலிகார் உள்ளிட்ட பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். கேரளாவில் நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். இதற்கிடையே டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் காயமடைந்த ஜாமியா மாணவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பச் சொல்லி விடுவித்த உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

"மாணவர்கள் போராட்டத்தில்தான் ஈடுபட்டார்கள். வன்முறையில் ஈடுபடும் திட்டம் அவர்களிடம் இல்லை. பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வேறுசிலர் நடத்திய போராட்டத்தையும் இதையும் தொடர்புபடுத்தி, காவல்துறை வன்முறைக் காடாக்கிவிட்டது' என்று குற்றம்சாட்டுகிறது பல்கலைக்கழக நிர்வாகம். "எங்களது மாணவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நடக்கவில்லை. டெல்லி காவல்துறை மீது வழக்கு தொடர இருக்கிறேன்'' என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் அறிவித்துள்ளார்.

"ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக வந்தபோது அவர்களை வழிமறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் எங்கள்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் மட்டுமே தாக்கினோம். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைக் கைதுசெய்தோம். காவல்துறையினர் சிலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன'' என தாக்குதலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் தென்கிழக்கு டெல்லியின் காவல் ஆணையர் சின்மோய் பிஸ்வால்.

மாணவர்களின் மீதான தாக்குதலின்போது, காவல்துறையினரோடு தனிநபர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவை தொடர்பான படங்களும் வெளியாயின. போராட்டக்களத்தை வன்முறைச் சூழலாக மாற்ற, காவல்துறையினரே மெரினா போராட்ட கடைசிநாள் பாணியில் வாகனங்களுக்கு தீவைக்கும் காட்சிகளும் ஆதாரங்களாக வெளிவந்திருக்கின்றன.

டெல்லி, மேற்குவங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, ஒடிசா ஆகிய மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள மாநிலத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் பினரயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் நின்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேற்குவங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மெகா பேரணியை தலைமையேற்று நடத்தி பரபரப்பு கிளப்பினார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிசம்பர் 17-ந்தேதி தி.மு.க. களமிறங்கியது.

மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், டிசம்பர் 17-ந்தேதி வழக்கை விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கின் போக்கு குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டபோது, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுக்காது. விடுமுறையும் அறிவிக்கப்பட உள்ளதால், ஜனவரியில்தான் விசாரணைக்கு எடுப்பார்கள். இந்த இடைவெளிக்குள் சட்டத்திருத்தத்தில், வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய இந்துக்கள் என்கிற வார்த்தையை எடுத்தால் அஸ்ஸாம், மேற்குவங்கத்தில் ஓரளவுக்கு போராட்டங்கள் ஓயலாம். அதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர்களைப் போல யாருக்கேனும் குடியுரிமை வழங்குவதுபோல் திருத்தி எழுதலாமா என்கிற ஆலோசனையும் மத்திய அரசு நடத்துகிறது. அதையே அமித்ஷாவும் உறுதிப்படுத்தினார்'' என்கிறார்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்.

இருப்பினும், டிசம்பர் 18-ந்தேதி இது தொடர்பான மனுக்களை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். நிலைமை சீரடையாவிட்டால், இந்தியா இந்"தீ'யாவாகும் ஆபத்து உள்ளது.