Skip to main content

அண்ணா நகரை ஐஏஎஸ் தலைநகராக்கியவர்! 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

இன்று காலை செய்தித் தொலைக்காட்சிகளில் 'சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி' நிறுவனர் சங்கர் தற்கொலை என்ற செய்தி பொதுமக்களுக்கு சாதாரண ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கும் அந்த பயிற்சி நிறுவனம் குறித்து அறிந்தவர்களுக்கும் அவர் குறித்து அறிந்தவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சி தந்த செய்தி. இந்தியாவின் முக்கிய அதிகாரிகளை உருவாக்கும் ஒரு புகழ் பெற்ற பயிற்சி நிறுவனத்தின் தலைவர், நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நண்பர், ஆயிரக்கணக்கான எதிர்கால ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி எப்படி எளிதாகக் கடந்து செல்லும்? காரணத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.

 

sankar ias



2004ஆம் ஆண்டு இவர் தொடங்கிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி, இன்று தமிழ்நாட்டின் பல நகரங்களில் பல கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. இவர் வேறு ஒரு தொழில் பார்த்துக்கொண்டு இதையும் ஒரு தொழிலாகத் தொடங்கவில்லை. இவரும் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதி, நேர்முகத் தேர்வுவரை சென்றவர். தன் அனுபவத்தை, பிறருக்கு கல்வியாக்கலாம் என்று பயிற்சி மையம் தொடங்கியவர்.

"பிரிட்டிஷ் காலத்துல இருந்தே கலெக்டர் பங்களாக்கள் எல்லாமே ஊருக்கு வெளியே, பெருசா, யாரும் எளிதாக உள்ளே செல்ல முடியாத கட்டுப்பாடுகளுடனேயே அமைக்கப்பட்டிருந்தன. இந்த விஷயமும் அவர்களிடம் நாம் அடிமையாய் இருந்ததும் சேர்ந்து கலெக்டர் வேலையெல்லாம் ரொம்ப பெரிய வேலை, நமக்கெல்லாம் அது கிடைக்காது, நம்மால் அது முடியாது' என்னும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. முதலில் அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிய வரணும். அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடியில் இருந்து வந்தவங்கதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பண்ண முடியும்னு நிறைய பேர் நினைக்குறாங்க. அது சுத்தப் பொய். சிவில் சர்விஸ் என்பது காமன் சென்ஸ்தான், பகுத்துப் பார்க்கும் அறிவு இருந்தா போதும். அது எல்லோருக்கும் வராது. ஆனால், இந்த காலேஜ்ல படிச்சாதான் வரும் என்பதும் கிடையாது. எங்க நிறுவனத்துக்கு வெளிநாட்டு யுனிவர்சிட்டியில் இருந்து வந்தவங்க இருக்காங்க. அவர்களால் சாதிக்க முடிஞ்சதை விட அதிகமாக சாதிச்சிருக்காங்க இங்க படிச்ச மாணவர்கள்" - இது சங்கர் பல முறை மாணவர்களுக்குக் கூறியது.


 

sankar family



இவர் தமிழ் வழி கல்வி படித்து 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவதைக் கூட கடினமாக உணர்ந்தவர். தன் 22 வயதில் கல்லூரி சென்று 27 வயதில் முதுகலை படிப்பு முடித்து 29 வயதில் தான்  சிவில் சர்விஸ் முயற்சியை தொடங்கினார். நேர்முகத் தேர்வு வரை சென்ற இவர், அதற்கு மேல் செல்ல முடியாத போது தன் அனுபவத்தைப் பகிர முடிவு செய்து பயிற்சி மையம் தொடங்கினார். பயிற்சி நிறுவனம் நடத்துவதோடு நிற்காமல் தேர்வு முறைகளில் எளிய மாணவர்களுக்கு எதிராக நடக்கும் மாற்றங்களை எதிர்த்து போராட்டங்களில் கலந்துகொண்டவர், குரல் கொடுத்தவர். பல எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு பணத்தை முக்கியமாகக் கருதாமல் பயிற்சியளித்தவர். ஐஏஎஸ் பயிற்சி என்றாலே டெல்லி என்றிருந்த நிலையை மாற்றி அண்ணா நகரை ஐஏஎஸ்க்கு பெயர் பெற வைத்தவர் சங்கர். ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையளித்த சங்கர், தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அவரது மாணவர்களுக்கும் அவரால் உருவான அதிகாரிகளுக்கும் பேரதிர்ச்சிதான்.

அண்ணா நகரில் சங்கர் பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு வகுப்புகளின் இடைவேளையில் இவர் வருவார். இயல்பாக நின்று புகைப்பார், வரும் மாணவர்களைக் கண்டு புன்னகைத்து ஹாய் சொல்லுவார். 'என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தெளிவு உனக்கு இருக்கிறது' என்ற எண்ணம் அது. அது உண்மைதான், இனி அந்த டீக்கடையில் அவரைக் காண முடியாது. என்றாலும், அவர் விதைத்த நம்பிக்கை சிவில் சர்விஸ் கனவுகளுடன் வரும் தமிழக கிராமப்புற மாணவனை அதிகாரத்துக்குக் கொண்டுவரும்.