Skip to main content

“மணிப்பூர் குற்றவாளி அடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ!” - ஆண்டாள் பிரியதர்ஷினி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Andal Priyadharsani about manipur viral video incident

 

மணிப்பூர் வீடியோ குறித்து தி.மு.க  மாநில செய்தி தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி  பேட்டி;

 

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை ஆடை இல்லாமல்  களைத்து நடுரோட்டில் இழுத்து அழைத்து செல்வது போல் ஒரு வீடியோ வந்திருக்கிறதே?


ரொம்பக் கொடுமையான காணொளியாக இருந்தது. அந்த காணொளியைப் பார்க்கும் போது கண்ணீர் பெருகியது. 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா இந்த மாதிரி தான் இருக்கிறது என்பதை உலக நாடுகள் குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆனால், நம்முடைய ஒன்றிய தலைவர் இதை உள்நாட்டு விவகாரம் என்று சொல்கிறார். பெண்ணுக்கு எந்த இடத்தில் பாதுகாப்பு இல்லையோ, அது உள்நாட்டு விவகாரம் இல்லை. அது உலக விவகாரம் தான். அதிலும், இவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று வெட்கமே இல்லாமல் அனைத்து விருதுகளையும் வாங்கி வருகிறார். இந்த 9 ஆண்டுகளில் உலகத்திலேயே அதிக பயணம் செய்த பிரதமர் யார் என்று கேட்டால் அது நம்முடைய இந்தியப் பிரதமர் தான். அதற்காகவே 9,000 கோடி செலவில் தனி விமானம் ஒன்று வாங்கியிருக்கிறார்.

 

மிகச் சமீபத்தில் கூட எகிப்து நாட்டுக்குச் சென்று மிக சிறந்த உயரிய மனிதர் விருதை வாங்கிக் கொண்டு வந்தார். எகிப்து என்பது பெரும்பாலும் 93 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழுகின்ற ஒரு தேசம். இஸ்லாமியர்கள் வாழுகின்ற  ஒரு தேசத்தில்  கொடுக்கப்பட்ட விருது உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் காட்டிய அந்த மனிதநேயத்தை உங்கள் தேசத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மீது ஏன் காண்பிக்க மாட்டுகிறீர்கள். இஸ்லாமியர்கள் கொடுக்கின்ற விருது உங்களுக்கு முக்கியம். ஆனால், இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை அழித்து அவர்கள் வாழ்வாதாரத்தை இல்லாமல் ஆக்குகின்ற கொடுமையை ஏன் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இது அவரிடம் நான் கேட்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கிறது.

 

அதே போல், ஜப்பானில் சென்று காந்தி சிலைக்கு மாலை போடுகிறார். ஆனால், இதே இந்தியாவில் காந்தி சிலை சுடுவதும், அவர் பொம்மையைச் சுட்டெரிப்பதும் போல் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல், ஆஸ்திரேலியா சென்றால், அங்குள்ள இந்து கோவில்களை காப்பாற்றுவது உங்களுடைய தார்மீக கடமை என்று அந்நாட்டு பிரதமரிடம் சொல்கிறார். அதே கடமை இங்கு இருக்கின்ற சிறுபான்மையினர் கோவில்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த கேள்வி இல்லையா. எனவே, அவர்கள் எல்லாருக்குமே இரட்டை நிலைப்பாடு தான். அது தான் ஆர்.எஸ்.எஸின் கொள்கையாகவும் இருக்கிறது. அதைத் தான் நம்முடைய ஒன்றிய அரசும் அப்படியே காப்பாற்றி வருகிறது. அவர் வாங்குகின்ற விருது எல்லாமே உலக மகா குரு போன்ற விருது தான். ஆனால், அவருக்கு இந்தியாவை நிர்வகிக்கத் தெரியவில்லை. பிரதமராக இருக்கத் தெரியவில்லை.

 

பிரதமர் பதவி என்பது, 9000 கோடி செலவில் தனி விமானம் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்வது தான் பிரதமரின் வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. மிகப் பெரிய அவமானமும், மிகப் பெரிய வலியைக் கொடுக்கின்ற காணொளியாக இருக்கிறது. இந்த நிர்வாணம் என்பதை ஆயுதமாகப் பயன்படுத்தி எப்படி தங்கள் போராட்டத்தை நிலை நிறுத்தினார்கள்  என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏனென்றால், ஆண்களால் செய்யப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹீராதாஸ் என்பவரை கைது செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். குறித்து வைத்து கொள்வோம், இந்த ஹீராதாஸ் என்பவர் எதிர்காலத்தில் பா.ஜ.க.வின் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ வாகவோ அல்லது தலைவராகவோ வருவார். ஏனென்றால், தலைவர் ஆவதற்கு அவர்களுடைய முதல் தகுதி என்னவென்றால்,  இந்த மாதிரி பெண்களை வன்புணர்வு செய்வது, பெண்களை இழிவு படுத்துவது தான். அந்த நிலையில் தான் நான் இதையும் பார்க்கிறேன்.