Skip to main content

யானைக்கு குரல் கொடுத்தவர்கள், இரண்டு மனித உயிர்களுக்கு குரல் கொடுத்தார்களா?? - ஆளூர் ஷாநவாஸ் கேள்வி!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

d

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

தூத்துக்குடியில் இரண்டு வணிகர்கள் சிறையில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள். ஊரடங்கை மீறி கடையை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததால் அவர்களைக் கைது செய்தததாக போலிஸ் கூறுகிறது. அவர்கள் குடும்பத்தின் தரப்பில் காவலர்கள் அவர்களை முரட்டுத்தனமாக அடித்தார்கள், அதை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். சிலரை பணியிடை மாற்றம் செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மிகவும் கண்டிக்கதக்க அரச பயங்கரவாத சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் அவர்கள் மறைந்துள்ளார்கள் என்று போலிஸ் கூறுகிறது. இருவரும் சில மணி நேரங்களில் மரணிக்கிறார்கள் என்றால் சிறைக்குச் செல்லும் முன் மருத்துவப் பரிதோதனைக்கு அவர்களை உட்படுத்தித்தானே அவர்களை சிறையில் அடைப்பார்கள். அப்புறம் எப்படி அவர்கள் கூறும் திடீர் உடல்நலக் குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். உடல்நலக்குறைவு இருவருக்கும் ஒரே நேரத்தில் வந்துவிடுமா? இந்த சம்பவத்திற்கு பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததா என்றால் இதுவரை மக்களிடம் எதிர்ப்பு வந்துள்ளதே தவிர மத்திய அரசோ அல்லது அமைச்சர் பெருமக்களோ இதற்கு எவ்விதமான எதிர்வினைகளையும் ஆற்றவில்லை. 

கேரளாவில் யானை மரணம் அடைந்த சம்பவத்திற்கு ஆளும் மத்திய அரசாங்கம் துடிதுடித்து போனதே, அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்களே? ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டதே, நாம் அந்த யானை பலியான சம்பவத்துக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆனால் இவர்கள் மனிதர்களுக்கு ஒரு நிலைபாடு, விலங்குகளுக்கு ஒரு நிலைபாடு என்று எடுத்துள்ளார்களோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றது. யானைக்கு கண்டனம் தெரிவித்த குரூப் இந்த சம்பவத்திற்கு இதுவரை யாராவது கண்டம் தெரிவித்துள்ளார்களா என்றால் இல்லை. இந்த படுகொலைக்கு கூட அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் மீது காவலர்கள் அத்துமீறி நடந்துகொண்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஒருவர் காவலரை தாக்கினார். காவலரை தாக்குவது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும் அவர் ஒரு எதிர்வினை ஆற்றினார். அதற்கு ரஜினிகாந்த் முதலானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வீடியோ போட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும், தனி சட்டம் போட்டு இவர்களை அடக்க வேண்டும் என்று பல்வேறு செய்திகளை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்தார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகி ஒப்புக்கு கண்டம் தெரிவிக்கிறார்கள். நாங்கள் சாதிய படுகொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டும் என்று கூறுகின்றபோது இவர்கள், போலிசாரின் நலனை பேணுகின்ற தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஏழைகளுக்கு இவர்களிடம் எப்போதுமே ஆதரவு இருக்காது" என்றார்.