Skip to main content

மனசாட்சியே இல்லாமல் கட்சிக்கு எதிரா இருக்கீங்க... தலைமை மீது கோபமான அதிமுக முஸ்லீம்கள்... அப்செட்டில் இபிஎஸ்! 

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்கள், தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டாமல், அக்கட்சியின் நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் விலகியே இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். விருதுநகரிலோ வெடித்தேவிட்டது...

வாட்ஸ்-ஆப்பில் பரவும் தகவல்களில்...

விருதுநகர் அ.தி.மு.க.வில் கட்சி பொறுப்புகளில் இருந்துகொண்டே, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலியில், சாலை மறியலில், ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் கலந்துகொண்டது ஏன்? திட்டவட்டமாக ஆதரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை விருதுநகர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் நயினாரும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்க்கின்றனரே?

 

admk



அ.தி.மு.க.வையும் அதன் தலைவர்களையும், குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வசைபாடிய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களாக இருக்கமுடியாது. உண்மைத் தொண்டர்கள் வறுமையில் தவிக்கும்போது, கடந்த 9 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடிகளைக் குவித்துவிட்டு, தற்போது சுயலாபத்திற்காக கட்சியைப் பாழ்படுத்துகின்றீர்கள். பதவி சுகத்தால் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட நீங்கள், கட்சிக்கு விசுவாசம் காட்டாமல், மனசாட்சியே இல்லாமல் கட்சிக்கு எதிராக செயல்படுகின்றீர்கள்.

 

admk



அவதூறாகப் பேசினார் என்று அமைச்சரும் விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி பொறுப்புகளில் உள்ள சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக கலந்துகொண்டது சரியல்ல. அ.தி.மு.க. ஆதரிக்கும் குடியுரிமைச் சட்டத்தை ஒவ்வொரு தொண்டனும் 100 சதவீதம் ஆதரிக்கிறான். நீங்களோ, கட்சியின் கொள்கையிலிருந்து முரண்படுகின்றீர்கள். தி.மு.க. அனுதாபிகள் ஆகிவிட்ட அனைவரும் வெளியேறுங்கள். நீங்கள் ஒரு முடிவெடுத்தே ஆகவேண்டும். 
 

admk



ஒரே கட்சியில் நிலவும் இந்தக் கருத்து முரண்பாட்டினை ‘ஸ்க்ரீன் ஷாட்’ ஆக எடுத்து நமக்கு அனுப்பிய கட்சியின் சீனியர் ஒருவர், "ஆண் டான் இல்லை.. அடிமை இல்லை.. எனக்கு நானே எஜமானாம்...’என்று திரையில் இஸ்லாமியர் வேடத்தில் ஆடிப் பாடினார் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய கட்சி, யார் யாரையோ திருப்திபடுத்துவதற்காக, மதரீதியாக திக்குத்தெரியாத திசையில் பயணிக்கிறது'' என்றார் வேதனையுடன்.

 

admk



பொதுவெளியில் குத்துச்சண்டை காமெடி பண்ணும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, பொறுப்புகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு விருதுநகரில் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் நயினாரை அழைத்துப் பேசினார். "சட்டமன்றத்திலேயே, குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வரே பேசியிருக்கிறார். பிறகு ஏன் தேவையில்லாமல் எதிர்க்கின்றீர்கள்? பெண்களோடு சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றீர்கள்?' என்று கூலாக கேட்டிருக்கிறார்.


நாம் விருதுநகர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் நயினாரிடம் பேசினோம். “எங்களுக்கு முகவரி கட்சிதான். அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா, எங்க சமுதாயத்துல 100 சதவீதம் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறாங்க. நானோ, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ இறந்தால், அடக்கம் பண்ணுவதற்கு எங்கள் சமுதாயத்தினரால்தான் முடியும். கட்சிக்காரர்கள் எங்களைத் தூக்கிக்கொண்டு பள்ளிவாசலுக்குள் வரமுடியாது. இன்னைக்குக்கூட சிவகாசியில ஒரு பிரச்சினை நடந்திருக்கு. ஏ.டி.எம்.கே. அடையாளத்தோடு யாரு வந்தாலும் உள்ளே விடாதீங்கன்னு. நான் மார்க்கத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது. கட்சியையும் விட்டுக்கொடுக்க முடியாது.


இந்தச் சட்டம் குறித்து அன்வர்ராஜா வெளிப்படையாவே பேட்டி கொடுக்கிறாரு. இந்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துலயும் போராட்டத்துலயும் கலந்துக்கக் கூடாதுன்னு கட்சித் தலைமை சொல்லல. ஆர்ப்பாட்டத்துல பேருக்கு அட்டென்ட் பண்ணுவோம். அந்த மாதிரி ஒரு சூழ்நிலைல இருக்கோம். வர்ற உள்ளாட்சி தேர்தல்ல நான் ரெட்ட இலைலதான் நிற்பேன். எங்க சமுதாய மக்கள் என்னைத் தோற்கடிச்சாலும் சரி, ஜெயிக்க வச்சாலும் சரி. எங்க வார்டுலயே இதை நான் சொல்லிட்டேன். அதே நேரத்தில், கட்சி பொறுப்பில் இருந்தும் இஸ்லாமியர் என்பதற்காக போட்டியிட வாய்ப்பு தரவில்லையென்றால், அதிருப்தியில் சுயேச்சையாக நிற்பவர்களை என்னால் தடுக்கமுடியாது'' என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

குடியுரிமைச் சட்டத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் இருந்தா சொல்லுங்க என சட்டமன்றத்தில் பொங்கினார் எடப்பாடி. நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள முஸ்லிம்களே!